Home உலகம் “வருமான வரி இல்லாத நாடுகள்: மக்கள் வரி செலுத்தவில்லை, ஆனால் அரசுகள் செழிக்கின்றன!

“வருமான வரி இல்லாத நாடுகள்: மக்கள் வரி செலுத்தவில்லை, ஆனால் அரசுகள் செழிக்கின்றன!

உலகில் உள்ள சில நாடுகள் தங்கள் குடிமக்களிடமிருந்து வருமான வரியை வசூலிக்காமலேயே சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வருகின்றன.

பொதுவாக, உலகின் பெரும்பாலான நாடுகளும் தங்களின் அன்றாட செயல்பாட்டுக்கு பொதுமக்களிடமிருந்து வரி வருவாயையே நம்பியுள்ளன. அதிலும் 90 சதவீதம் நாடுகளில் தனிநபர் வருமான வரியே முக்கிய வருவாய் ஆதாரமாகும்.

ஆனால் சில நாடுகளில் மக்களிடமிருந்து வருமான வரி வசூலிக்கப்படவில்லை என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். உண்மையில், பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் வருமானத்திற்கு அந்த நாடு வரி வசூலிக்கவில்லை.

இதில் எண்ணெய் வளம் அதிகமான சில வளைகுடா நாடுகள் முக்கியமாக உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை.

அதே நேரம், தனியார் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் டாக்ஸ் எனப்படும் நிறுவனம் வரியும், வாடிகை கூட்டப்பட்ட வரியும் வசூலிக்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் தனித்தனியாக சமூக பாதுகாப்பு வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அதேபோல், வளம் அதிகமான கரிபியன் தீவுகள்—பகாமாஸ், பெர்முடா, கேமன் தீவுகள் போன்ற நாடுகளிலும் பொதுமக்களுக்கு வரிகள் விதிக்கப்படுவதில்லை.

அந்த நாடுகளில் சில வெளிநாட்டு குடிமக்களுக்கு வருமான வரி விதிக்கப்படுகின்றது. மேலும், ஐரோப்பிய நாடான மொனாக்காவில் குடிமக்களுக்கு வருமான வரி விதிக்கப்படுவதில்லை. அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வரி விதிக்கப்படும், ஆனால் பிரான்ஸ் குடிமக்களுக்கு மட்டும் வருமான வரி வசூலிக்கப்படுகிறது.

இந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, பல்வேறு நிறுவனங்களை நடத்துகின்றனர். இதனால், அவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு அதிக அளவில் நிறுவன வரி செலுத்த வேண்டி வருகின்றனர். இதனால் பிற நாடுகளில் வாழும் மக்களைவிட, இங்கு வாழும் மக்கள் பொதுவாகவே அதிகமாக அரசுக்கு வரி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.