Home தமிழகம் “ஓமியோபதி மாணவி மரணம்: தலைமறைவான வளர்ப்பு தந்தை – போலீஸ் தீவிர தேடல்”

“ஓமியோபதி மாணவி மரணம்: தலைமறைவான வளர்ப்பு தந்தை – போலீஸ் தீவிர தேடல்”

திருநெல்வேலி மாவட்டம், வீரவேநல்லூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது வளர்ப்பு மகள்தான் வர்ஷினி. இவர் சேலம், சிவதாபுரத்தில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு பயின்று வந்துள்ளார்.

கடந்த 6ஆம் தேதி, அவர் தங்கியிருந்த அறையிலேயே கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து இரும்பாலை உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையிலேயே இது கொலை சம்பவம் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், வர்ஷினியின் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருந்தது உறுதியாக தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, தாய் உஷா மகளின் உடலை பெற்றுக்கொண்டு திருநெல்வேலிக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை மேற்கொண்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில், வர்ஷினி இரண்டு குழந்தைகளின் தந்தையைக் காதலித்ததன் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மகளை கொலை செய்துவிட்டு வரதராஜன் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், வரதராஜன் சென்னை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உதவி கமிஷனர் முரளி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சென்னை, நெல்லை, திருப்பதி உள்ளிட்ட பல இடங்களில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைசியாக, வரதராஜன் சென்னை வடபழனிக்கு சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்று வருகின்றனர். விரைவில் அவரை கைது செய்வோம் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.