Home தமிழகம் “சென்னை ஏன் இப்படி குளிர்கிறது? மார்கழி காட்டும் வேறு முகம்”

“சென்னை ஏன் இப்படி குளிர்கிறது? மார்கழி காட்டும் வேறு முகம்”

இந்த மார்கழி மாதம், கடந்த ஆண்டுகளை விட தனித்துவமாகவும் கடும் குளிருடனும் காணப்படுகிறது. ஜனவரி தொடங்கியதிலிருந்து சென்னையில் “இது சென்னைதானா?” என்று கேட்கும் அளவுக்கு குளிர் நிலவி வருகிறது.

காலை மட்டுமல்ல, மதிய நேரத்திலும் குளிர் குறையாமல் நடுநடுங்கும் நிலை காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து, குளிரை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

கடந்த 4–5 நாட்களாக இதே போன்ற குளிர்ந்த வானிலை தொடர்கிறது. இன்று சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பொதுவாக 25 டிகிரி இருக்கும் நிலையில், 3–4 டிகிரி குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஊட்டி, கொடைக்கானல் வெப்பநிலைக்கு அருகில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது. வேளாங்கண்ணியில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த அதிக குளிருக்கு காரணமாக வட இந்தியாவிலிருந்து வீசும் குளிர்ந்த, வரண்ட காற்று, வட பகுதியில் நிலவும் உயரழுத்த அமைப்பு, குறைந்த ஈரப்பதம் (Low Humidity) உலகளாவிய காலநிலை மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதன் காரணமாக உடல் வெப்பம் விரைவாக இழக்கப்பட்டு குளிர் அதிகமாக உணரப்படுகிறது.

இந்த குளிர்ந்த வானிலை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் பொங்கல் முதல் வரண்ட வானிலை நிலவும்; அப்போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை என கணிக்கப்பட்டுள்ளது.