குடியரசுத் தலைவர் தேநீர் விருந்துக்கு கோவை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சிறப்பு அழைப்பு :
குடியரசு தின விழாவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள கோவையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் குடியரசு தின பேரணையை நேரில் காணும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கீதா, கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் பாலாஜி கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இருவரின் மாத வருமானம் குறைவாக இருந்த போதிலும், மாதம் ₹ 4,000 வீட்டு வாடகை செலுத்தி நீண்ட காலமாக வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களின் இரண்டு மகன்களையும் அரசு பள்ளிகளில் சேர்த்து முறையான கல்வி அளிப்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்தி வந்தனர். தொடர்ந்து வாடகை வீட்டில் வசித்து வந்ததால், சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற சங்கீதா முக்கிய முடிவை எடுத்தார்.
அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் ₹2.10 லட்சம் மானியம் பெற்றார். மேலும், கூட்டுறவு வங்கியில் இருந்து ₹5 லட்சம் கடன் பெற்று சொந்த வீடு கட்டி தனது கனவை நனவாக்கினார்.
கடின உழைப்பு, பொறுமை மற்றும் தொடர்ச்சியான முயற்சியின் மூலம் வாழ்க்கையில் முன்னேறியதற்காக, பிரதமர் ஆவாஸ் யோஜனா (PMAY) – பிஎல்சி திட்டத்தின் பயனாளியான சங்கீதாவை கௌரவிக்கும் வகையில், குடியரசு தின விழாவுக்கான சிறப்பு அழைப்பிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
“ஏழு ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். பல கஷ்டங்களை சந்தித்து, சிறு சிறு சேமிப்புகளின் மூலம் சொந்த இடத்தில் வீடு கட்ட முடிந்தது. தமிழக அரசின் மானியம் எனக்கு பெரிய உதவியாக இருந்தது. குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு வந்ததும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது” என்றார்.
மேலும், சமூகத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு தொந்தரவுகளை சந்தித்து வருவதாகவும், இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.








