Home உலகம் ”சவுதி அரேபியா பாலைவனம் அல்ல… இனி சோலைவனம்!

”சவுதி அரேபியா பாலைவனம் அல்ல… இனி சோலைவனம்!

100 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வரும் சவுதி அரேபியா, “எங்கள் நிலங்கள் பாலைவனம் அல்ல; சோலைவனம்” என்று கூறி, தன் தலைஎழுத்தையே மாற்றி எழுதுகிறது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் நிலப்பரப்பில் சுமார் 95 சதவீதம் பாலைவனமாகவே உள்ளது.

அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் மணல் மேடுகளே காணப்படும். சவுதி அரேபியாவையும் பாலைவனத்தையும் பிரிக்க முடியாது; புற்கள் கூட முளைக்காது என ஒரு காலத்தில் முத்திரை குத்தப்பட்டது. அந்தப் பார்வையையெல்லாம் உடைத்து, பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சியில் சவுதி அரேபியா மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டு, “சவுதி பசுமை திட்டத்தை” பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தொடங்கி வைத்தார். ஒரு காலத்தில் சவுதி அரேபியா பசுமையான காடுகளும் அதிக மழையும் பெற்ற பகுதியாக இருந்ததாகவும், அந்தப் பழைய சவுதி அரேபியாவை மீட்டெடுப்பதே தன் லட்சியம் எனவும் முகமது பின் சல்மான் சபதம் எடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் பாலைவனத்திற்கு புழுதி புயல்களே அடையாளமாக இருந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதனைத் தொடர்ந்து, பனிப்பொழிவால் பாலைவன மணற்பரப்பின் மீது வெண்பனி படர்ந்தது. அந்த வெள்ளை பனிகளுக்கு மத்தியில் ஒட்டகங்கள் காட்சியளித்தது இயற்கையின் விசித்திரங்களில் ஒன்றாக அமைந்தது.

எப்போதும் குறைந்த அளவே மழைப்பொழிவு பதிவாகும் சவுதி அரேபியாவில், காலநிலை மாற்றத்தால் தற்போது அங்குள்ள சூழல் நிலவரமே மாறியிருக்கிறது.

பாலைவனத்தில் மரம் எப்படி வளரும் என்ற சந்தேகம் இயல்பாகவே எழலாம். இதற்கு விடையாக, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த ஆராய்ச்சியின் மூலம் அறிவியலும் பாரம்பரியமும் இணைந்தால், வரட்சியைத் தாங்கி வளரும் பூர்வீக மரங்களும் புதர்களும் முதலில் வளர்க்கப்பட்டன.

அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததையடுத்து, பனை, அத்தி, மாதுளை உள்ளிட்ட 165-க்கும் மேற்பட்ட அந்த மண்ணின் பூர்வீக தாவர இனங்கள் தற்போது நடவு செய்யப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகள் நடுவதற்கு முன், அரைநிலா வடிவ குழிகள் வெட்டி மழைநீரை தேக்கி வைக்கப்படுகிறது.

மரக்கன்றுகள் முதலில் நாற்றாங்கால்களில் வளர்க்கப்பட்டு, பின்னர் முக்கிய நகரங்கள், நெடுஞ்சாலைகள், மழைக்காடுகள், தேசிய பூங்காக்கள், பல்லுயிர் தளங்கள் போன்ற இடங்களில் நடப்பட்டு வருகின்றன.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தேங்காய் நார் அடிப்படையிலான சொட்டுநீர் பாசன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நகர கழிவுநீரை மறுசுழற்சி செய்து மரம் வளர்ப்பதற்காக சவுதி அரேபியா அரசு பயன்படுத்தி வருகிறது.

மழைநீரை தேக்குவதற்காக சுவர் போன்ற நீர்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மண்ணில் ஈரத்தன்மை நீடிப்பதோடு, ஆவியாகும் நீரின் அளவும் குறைகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சவுதி பசுமை திட்டத்தின் கீழ், 18 கோடி ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் 1,150 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை சுமார் 15 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன.

2030 ஆம் ஆண்டுக்குள் 60 கோடி மரங்களை நட்டு வளர்ப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, சவுதி அரேபியாவின் வேளாண் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல்பட்லே தெரிவித்துள்ளார்.

எனினும், பசுமை புரட்சி செய்து வரும் சவுதி அரேபியாவின் இறுதி இலக்கு 100 கோடி மரங்களை நட்டு வளர்ப்பதுதான். இது வெறும் காடு வளர்ப்பு திட்டம் மட்டுமல்ல; உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பல்லுயிர் பெருக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும்.

பாலைவனத்திற்கு எதிரான இந்த மாபெரும் பசுமை யுத்தத்தின் மூலம், அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் சவுதி அரேபியா பசுமை பூமியாக மாறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“காடுகளை அழித்து நகரங்களாக மாற்றினால்தான் வளர்ச்சி கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்” என்று கூறுபவர்களுக்கு மத்தியில், பசுமை புரட்சிதான் உண்மையான வளர்ச்சி என்பதை உலக நாடுகளுக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்கிறது சவுதி அரேபியா.