ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் குளிர்காலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமாகக் கருதப்படும் 76-வது சப்போரோ பனித் திருவிழா (Sapporo Snow Festival) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் இந்த விழா, குளிர்காலத்தின் அழகையும் பனியின் கலை வடிவத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய விழாவாகக் கருதப்படுகிறது.
1950ஆம் ஆண்டு, சப்போரோ நகரின் சில பள்ளி மாணவர்கள் உருவாக்கிய சிறிய பனி சிற்பங்களே இந்த திருவிழாவின் தொடக்கமாக அமைந்தது. இன்று அந்த முயற்சி, உலகின் மிகப்பெரிய பனி திருவிழாவாக வளர்ச்சி பெற்றுள்ளது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக, மிகப் பெரிய பனி சிற்பங்கள், பனியால் வடிவமைக்கப்பட்ட கோவில்கள், அரண்மனைகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. இரவு நேரங்களில் ஒளி அலங்காரங்களுடன் இந்த பனி சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
சப்போரோ நகரின் ஒடோரி பூங்கா, சுசுகினோ மற்றும் சுட்டோமே ஆகிய மூன்று முக்கிய இடங்களில் இந்த திருவிழா நடைபெறுகிறது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான பனி விளையாட்டுகள், ஸ்னோ ஸ்லைடிங், பாரம்பரிய ஜப்பானிய உணவுக் கடைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த பனித் திருவிழாவை காண ஒவ்வோர் ஆண்டும் இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சப்போரோ நகருக்கு வருகை தருகின்றனர்.
சுற்றுலா வளர்ச்சிக்கும், குளிர்காலத்தை கொண்டாட்டமாக மாற்றும் கலாச்சாரத்திற்கும் அடையாளமாக விளங்கும் சப்போரோ பனித் திருவிழா, உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.








