இந்திய வருமான வரித்துறை புதன்கிழமை (டிசம்பர் 18) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, நடப்பு 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 16.45 சதவீதம் அதிகரித்து ரூ.15,82,584 கோடியாக உள்ளது.
மொத்த அடிப்படையில், நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17, 2024 வரையிலான இந்தியாவின் நேரடி வரி வசூல் ரூ.19,21,508 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 20.32 சதவீதம் அதிகமாகும். இதில் ரீஃபண்ட் ரூ.3,38,924 கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 42.49 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17, 2024 வரை வசூலாகியுள்ள முன்கூட்டிய வரி (Advanced Tax Collections) ரூ.7,56,015 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20.90 சதவீதம் அதிகரித்துள்ளது.
கார்ப்பரேட் வரி, கார்ப்பரேட் அல்லாத வரி, பத்திரப் பரிவர்த்தனை வரி மற்றும் விளிம்புநிலை நன்மை வரி, செல்வ வரி, வங்கி பண பரிவர்த்தனை வரி, ஹோட்டல் ரசீது வரி, வட்டி வரி, செலவு வரி, எஸ்டேட் வரி மற்றும் பரிசு வரி போன்ற பிற வரிகள் இதில் அடங்கும்.