Home தமிழகம் “நந்தனத்தில் 49வது புத்தக காட்சி: இலவச நுழைவுடன் நாளை தொடக்கம்!”

“நந்தனத்தில் 49வது புத்தக காட்சி: இலவச நுழைவுடன் நாளை தொடக்கம்!”

சென்னை நந்தனம் ஓஎம்சி மைதானத்தில் நாளை புத்தக கண்காட்சி தொடங்குகிறது. சென்னை நந்தனம் ஓஎம்சி மைதானத்தில் நாளைய தினம் 49வது புத்தக காட்சி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கக்கூடிய நிலையில், இதற்காக இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

நந்தனம் ஓஎம்சி மைதானத்தில் 49வது புத்தக காட்சி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக நாளை முதல் நடைபெற இருக்கிறது.

நாளை தொடங்கக்கூடிய இந்த புத்தக காட்சி ஜனவரி 21 ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 14 நாட்கள் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இந்த புத்தக கண்காட்சி மூலம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த முறை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டை காட்டினால் இலவசமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனைவருக்கும் நுழைவு கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் 10 ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது.

நாளை தொடங்கக்கூடிய இந்த புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கத்திலும் பல்வேறு பதிப்பகங்கள் பல தலைப்புகளில், பல மொழிகளில், புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கின்றன.

தற்போது அந்தந்த பதிப்பகங்களில் புத்தகங்களை அடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனைத்து 1000 அரங்குகளும் அமைக்கப்பட்டபின்பும், விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்து புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புத்தக கண்காட்சியை காண வருவதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நந்தனத்திலிருந்து சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தம் வரை இலவச மினி பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. குறிப்பாக மாலை நேரங்களில் சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் வர இலவச மினி பேருந்துகள் செயல்படும்.

ஒவ்வொரு அரங்கத்திலும் புத்தகங்களை அடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.