ஒரே ஒரு சிலை. அதைத் தொடர்ந்து எடுக்க எடுக்க வெளிவந்த 50 சிலைகள். திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் ஆழத்தில் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்த ஒரு பொக்கிஷம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில், கூவம் ஆற்றுப் படுக்கையில் 50 பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில், முனுசாமி என்பவர் ஆற்றுப் படுக்கை வழியாக நடந்து சென்றபோது, மணலுக்குள் ஒரு கற்சிலையின் ஒரு பகுதி வெளியில் தெரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் அளித்த தகவலின் பேரில், கிராம மக்கள் அங்கு திரண்டனர். முதலில் கண்டெடுக்கப்பட்ட அந்த ஒரே சிலையை மீட்டனர். ஆனால் அதோடு முடிவடையவில்லை. அதே இடத்தில் மணலை தோண்டத் தொடங்கியபோது, அடுத்தடுத்து பல சிலைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இதில் விநாயகர், முருகர், ஐயப்பன், அம்மன் மற்றும் சர்ப்ப சிலைகள் உள்ளிட்ட மொத்தம் 50 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையானவை என்பதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இவற்றை அரசு வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கடம்பத்தூர் காவல் துறையினர், கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, வருவாய் துறையினர் நேரில் வந்து, 50 சிலைகளையும் முறைப்படி மீட்டு, விரிவான ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
கூவம் ஆற்றில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் ஏதேனும் பழங்கால கோயில் இருந்ததா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் வரலாற்றுப் பின்னணி உள்ளதா என்ற கேள்வியையும், பெரும் ஆர்வத்தையும் அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தின் பக்கமாக கூவம் ஆறு ஓடுகிறது. கடந்த ஆறு மாதங்களாக அதிக அளவில் தண்ணீர் சென்றதால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தது. தற்போது மழை குறைந்ததால் நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் ஒரு ஓடையாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், காலையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆற்றுப் பக்கம் சென்றபோது, தண்ணீருக்குள் ஒரு சிறிய சிலை இருப்பதை பார்த்துள்ளனர். அந்த சிலையை எடுத்த பிறகு, அருகில் நண்பர்களை அழைத்து மணலை தோண்டியபோது, மேலும் பல சிலைகள் கிடைத்தன.
விநாயகர், முருகர், ஐயப்பன் உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகள் கிடைத்ததை பார்த்து, அவை மிகவும் பழமையானவை என்பதை உணர்ந்தோம்” என்று தெரிவித்தனர்.








