Home தமிழகம் “சுயதொழில் தொடங்க பெண்களுக்கு புதிய வாய்ப்பு… ₹5000 மானியம்”

“சுயதொழில் தொடங்க பெண்களுக்கு புதிய வாய்ப்பு… ₹5000 மானியம்”

பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், ‘தோழி’ விடுதி உள்ளிட்ட திட்டங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெண்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மாதந்தோறும் ₹1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், இதனைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இதேபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஆதரவற்ற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்காக தமிழக அரசு மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெண்கள் சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்டும் வகையில் கிரைண்டர் வாங்க ₹5000 மானியம் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் தங்கள் சொந்த காலில் நின்று வாழ்வாதாரம் நடத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் ₹10,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு மொத்த விலையின் 50% அல்லது அதிகபட்சமாக ₹5000 வரை அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படும்.

உதாரணமாக, ₹15,000 மதிப்புள்ள கிரைண்டர் வாங்கினால், அதில் ₹5000 மானியமாக கிடைக்கும்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணாகவும், 25 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சமூக நல அலுவலகங்களை தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.