இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர வடக்கு கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக, தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான பாம்பன், சின்னப்பாலம், முந்தல் முனை, புதுத்தெரு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக 400 மீட்டருக்கு மேல் கடல் நீர் உள்வாங்கியுள்ளது.
திடீரென கடல் நீர் உள்வாங்கியதன் காரணமாக, கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் தரைதட்டியுள்ளன.
வடக்கு கடல் பகுதி கடும் சீற்றத்துடன் சூரைக்காற்று வீசி வரும் நிலையில், தெற்கு கடல் பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் கடல்வாழ் உயிரினங்களான சிப்பி, சங்கு, நட்சத்திர மீன் உள்ளிட்டவை வெளிப்படையாக தெரிந்து வருகின்றன.
சின்னப்பாலம், தோப்புக்காடு, நடுத்தெரு போன்ற பகுதிகளில் இவ்வாறு வழக்கத்திற்கு மாறாக தற்போது கடல் நீர் உள்வாங்கியுள்ளது. தண்ணீர் இல்லாத காரணத்தால் கடல் அட்டைகள், சிறிய சிப்பி வகைகள், மீன்கள் உள்ளிட்டவை தண்ணீர் தேடி கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கடல் நீர் சுமார் 500 மீட்டர் வரை உள்வாங்கியுள்ளதால், 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் முழுவதுமாக தரைதட்டியுள்ளன.
நினைத்த நேரத்தில் கடலுக்கு செல்ல முடியாத நிலை காரணமாக, மீனவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு இந்த சிறிய காவாய்கள் (கால்வாய்கள்) உள்ள இடங்களை விரிவுபடுத்தி வழங்கினால், கடலுக்கு செல்லவும் திரும்பவும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அரசு இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.








