Home தமிழகம் காசிமேடு கடற்கரையில் ஆபத்தான ‘ப்ளூ டிராகன்’… மக்கள் அச்சம்!

காசிமேடு கடற்கரையில் ஆபத்தான ‘ப்ளூ டிராகன்’… மக்கள் அச்சம்!

உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கடல்வாழ் உயிரினமான ப்ளூ டிராகன் (Blue Dragon) கரை ஒதுங்கியதால், சென்னை காசிமேடு பகுதியில் பரபரப்பும் பதற்றமான சூழ்நிலையும் தற்போது நிலவி வருகிறது.

கடலில் பல்வேறு அதிசயமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் ஒன்றான ப்ளூ டிராகன் என்ற அரிய கடல்வாழ் உயிரினம் கரை ஒதுங்கியதை கண்டு, அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொதுவாக ஆழ்கடலில் வாழும் இந்த ப்ளூ டிராகன் உயிரினங்கள், புயல் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக கரை நோக்கி வரக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வகை உயிரினங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக தூரத்தில் இருந்து பார்ப்பதே பாதுகாப்பானது, அருகில் சென்று தொடவோ அல்லது கையாளவோ கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பெயினில், இதேபோன்று ப்ளூ டிராகன் கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் அதிக அளவில் ப்ளூ டிராகன் உயிரினங்கள் கரை ஒதுங்கியுள்ளதால், அவற்றைக் காண பொதுமக்கள் கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏதேனும் விபத்து அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் எச்சரிக்கையை மீறி இந்த உயிரினங்களை அருகில் சென்று பார்ப்பதால் அபாயம் ஏற்படலாம் என்பதால், ப்ளூ டிராகன் உயிரினங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஏற்கனவே, டிசம்பர்–ஜனவரி மாதங்களில் அரிய வகை ஆமைகள் அதிக அளவில் செத்து கரை ஒதுங்குவது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில், தற்போது ப்ளூ டிராகன் உயிரினங்களும் கரை ஒதுங்கியிருப்பது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.