Home தமிழகம் ”போலி மருந்துகளுக்கு முடிவு: சிவப்பு கோடு பட்டையுடன் மட்டுமே ஆன்டிபயோடிக் விற்பனை”

”போலி மருந்துகளுக்கு முடிவு: சிவப்பு கோடு பட்டையுடன் மட்டுமே ஆன்டிபயோடிக் விற்பனை”

சிவப்பு கோடு பட்டை குறிப்பிடப்படாமல் உள்ள எந்த ஒரு ஆன்டிபயோடிக் மாத்திரைகளையும் வாங்க வேண்டாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பிரபல நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அம்பலமானது.

இதன் காரணமாக, ஆன்டிபயோடிக் மருந்துகளின் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆன்டிபயோடிக் மாத்திரைகளின் அட்டையின் பின்புறத்தில் சிவப்பு கோடு பட்டை இருந்தால் மட்டுமே அந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிவப்பு கோடு பட்டை இல்லாத எந்த ஒரு ஆன்டிபயோடிக் மாத்திரைகளையும் மருந்தகங்களில் வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு சிவப்பு கோடு பட்டை இல்லாமல் ஆன்டிபயோடிக் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மருந்தகங்களில் ஒட்டப்பட்டிருக்கும் கியூஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்து புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.