Home தமிழகம் “திண்டுக்கல் நகைக்கடையில் கோடி மதிப்புள்ள நகைகள் மோசடி

“திண்டுக்கல் நகைக்கடையில் கோடி மதிப்புள்ள நகைகள் மோசடி

திண்டுக்கல்லில் நகைக்கடையில் சிறுக-சிறுக ஒரு கோடி 40 லட்ச ரூபாய் நகைகளை திருடிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று மாதமாக நடந்து வந்த மோசடி விசாரணை இதன் மூலம் அம்பலமானது. திண்டுக்கல் நகரின் மெயின் ரோட்டில் ஒரு தங்கக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு தணிக்கையாளராக வைஷ்ணவி பணியாற்றி வருகிறார்.

கடந்த இரண்டாம் தேதியில் தரைதளத்தில் உள்ள தங்க நகைகள் பிரிவில் தணிக்கை செய்ததில், ஒரு கிலோ 10 கிராம் எடையுள்ள 45 எண்ணிக்கை கொண்ட தங்க நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நகைகளின் மதிப்பு ஒரு கோடி 43 லட்ச ரூபாயாக இருந்தது.

இதையடுத்து உடனடியாக நகைக்கடையின் துணை பொது மேலாளர் ரேணுகேசனுக்கு தகவல் வழங்கப்பட்டது. தரைதளத்தில் பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன், சிவா, கார்த்திக், விநாயகன், செல்வராஜ், வெங்கநாயகி, ஆனந்தஜோதி, ஆனந்தன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் ஷார்ட் நெக்லஸ் பிரிவின் மேலாளராக பாலசுப்பிரமணியன் உள்ளார். அவருக்கு கீழ் அந்த பிரிவில் சிவா தலைமை விற்பனை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

பாலசுப்பிரமணியன் இல்லாத நேரங்களில், சிவா மேலாளர் பொறுப்பை கவனித்து வந்தார். அடுத்து நகைக்கடையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களிடமும் துணை பொது மேலாளர் விசாரணை செய்தபோது, பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த போது, சிவா கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி டிஸ்ப்ளேயில் இருந்து மூன்று ஷார்ட் நெக்லஸ் தங்க நகைகளை எடுத்தது, அதேபோல் நவம்பர் 14ஆம் தேதியிலும் நான்கு தங்க நகைகளை எடுத்தது தெரிய வந்தது.

பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த தினங்களில், சிவா அடிக்கடி தங்க நகைகளை எடுத்து, நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார், கார்த்திக் மற்றும் விற்பனையாளர் விநாயகன் ஆகியோரின் உதவியுடன் டேமேஜ் எனக் காட்டி நகையை விற்று, பணத்தை பங்கிடும் நடைமுறை நடைபெற்றது.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம், தங்க நகைக்கடை துணை பொதுமேலாளர் ரேணுகேசன் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தலைமை விற்பனையாளர் சிவா, நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார், கார்த்திக் மற்றும் விற்பனையாளர்கள் விநாயகன் ஆகியோருக்கு வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையின் போது, சிவா, விநாயகன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.