மனைவிக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்ததன் பின்னணி என்ன? வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயதான கருணாகரன்.
14 ஆண்டுகளுக்கு முன்பு கருணாகரனுக்கும் கலையரசிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது கலையரசி திடீரென கரண்ட் ஷாக் அடித்து உயிரிழந்துவிட்டதாக உறவினர்களுக்கு கருணாகரன் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே சுமூக உறவு இல்லை என்பது கலையரசியின் தந்தைக்கு தெரிந்திருக்கிறது. இதன் காரணமாக, அவர் மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் கருணாகரனை அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கலையரசிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு ஆண் நபருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தெரிய வருகிறது. இதனை கருணாகரன் பலமுறை கண்டித்தும், கலையரசி அந்த ஆண் நண்பருடனான உறவை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி சண்டை, சச்சரவுகள் நடைபெற்று வந்துள்ளன. சம்பவம் நடந்த நாளன்று, கலையரசி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருப்பதை கருணாகரன் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மேல் இவர்களை விட்டுவைக்கக் கூடாது என்ற ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கருணாகரன், கலையரசியை கொலை செய்யும் முடிவிற்கு வந்துள்ளார். அன்று இரவு கலையரசி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததாகவும், துடிதுடிக்க உயிரிழக்கச் செய்ததாகவும் கருணாகரன் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், கலையரசி உயிரிழந்த பிறகு விசாரணையிலிருந்து தப்பிக்கவே மனைவி கரண்ட் ஷாக் அடித்து இறந்துவிட்டதாக கருணாகரன் நாடகமாடியதும் உறுதியாகியுள்ளது.
கொலையாளியிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.








