தினமும் இந்த மாதிரி பஸ் வந்து லேட்டா வருது. இன்னைக்கு வரவே இல்ல 1½ கிலோமீட்டர் அங்க இருந்து நடந்து வரவேண்டும் 8:30க்கு சிறப்பு வகுப்பு ஆனா பஸ் 8.3க்கு தான் எங்க ஊருக்கே வரும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிக்குளத்திற்கு நாள்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
காமநாயக்கன்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சங்குளம், கோவிந்தம்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம், கப்பிக்குளம் ஆகிய கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய இந்த அரசு பேருந்தில் காலை வேளையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் 22 ஆம் தேதி அரசு பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் வெகு நேரமாகியும் பேருந்து வரவில்லை என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு நேரமானதால் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.
இது குறித்து கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கேட்டபோது வழக்கமாக செல்ல வேண்டிய அரசு பேருந்து பஞ்சராகியதால் செல்லவில்லை என்றும் இனிவரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்து திடீரென்று வராமல் இருப்பதால் பள்ளிக்கு செல்லக்கூடிய கிராமப்புற மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காலையும் மாலையும் பள்ளி வேளையில் இயக்கக்கூடிய அரசு பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் தமிழக அரசுக்கும் பள்ளி கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.








