Home தமிழகம் “விஜய் நடித்த ஜனநாயகன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்ட் அதிரடி!”

“விஜய் நடித்த ஜனநாயகன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்ட் அதிரடி!”

ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்ட்) உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு யுஏ தணிக்கை சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து மத்திய சென்சார் வாரியம் இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பாக, விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு தொடரும் சூழ்நிலையில், தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் தீர்ப்பு அல்லது உத்தரவுகள் வழங்கக் கூடாது என்பதே மத்திய சென்சார் வாரியம் தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவின் நோக்கமாகும்.

நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், தனது திரைப்பட வாழ்க்கையின் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், இதுவரை திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் (KVN) நிறுவனத்திற்கு, கடந்த ஜனவரி 6ஆம் தேதி, படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் உள்ளதாகக் கூறி, திரைப்படத்தை மறு ஆய்வு குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தணிக்கை வாரியம் தலைவர் கடிதம் வழங்கியிருந்தார்.

இதன் காரணமாக, ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பி.டி. ஆஷா அமர்வு, கடந்த ஜனவரி 7ஆம் தேதி வழக்கை விசாரித்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்டு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

பின்னர் ஜனவரி 9ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், திரைப்பட தணிக்கை வாரியத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு அன்று மாலையே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய இரு நீதிபதிகள் அமர்வு, திரைப்படத்தை திரையிடுவதற்கான தொடர்பான உத்தரவுகளையும் பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து, அந்த திரைப்பட நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றைய தினம் ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பாக மத்திய சென்சார் வாரியம் உச்சநீதிமன்றத்தில் தனது கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த கேவியட் மனுவின் சாராம்சம், ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பாக, தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவொரு தீர்ப்பையோ அல்லது உத்தரவையோ உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்பதே ஆகும்.