புரதங்களையும் நல்ல கொழுப்புகளையும் கொண்ட உணவுகளை அதிகமாகவும், முழு தானியங்களை குறைவாகவும் உண்ண அறிவுறுத்தும் புதிய முறையை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது அமெரிக்காவில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அறிவுறுத்தியுள்ள இந்த உணவு பழக்கம் நமது நாட்டுக்கு ஏற்ற ஆரோக்கியமான முறையா என்பதை பார்க்கலாம்.
இந்திய உணவு பழக்கம் இப்போதைய காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்து பொரித்த உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டதாக மேற்கத்திய பாணியில் மாறியுள்ளது.
ஆனால் நமது முந்தைய உணவு பழக்கம் சிறுதானியங்கள், கீரை வகைகள், கோழி, ஆடு, பால் பொருட்கள் போன்றவற்றை கொண்டதாகவே இருந்தது.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் தற்போது தமது உணவு பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துள்ளன.
மேலிருந்து கீழான பிரமிட் அடிப்படையில் உணவு பழக்க முறையை அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை அமைச்சர் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர் அறிவித்துள்ளார்.
நார்சத்து அதிகம் கொண்ட உணவுகள், புரதம், பால் பொருட்கள், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
தமது உடலின் தலா 1 கிலோ எடைக்கு 1.6 கிராம் புரத உணவை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சிகப்பு இறைச்சி, பால் பொருட்கள், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய சூழ்நிலையை சீர்தூக்கி பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தியர்களின் உணவில் சுமார் 73% புரதச்சத்து குறைவாக உள்ளது என்று மருத்துவர் கு. கணேசன் கூறுகிறார்.
மேலும், 10 இந்தியர்களில் 9 பேர் தங்களின் தினசரி புரத தேவையை அறியாமல் இருப்பதுடன், பெரும்பாலும் கார்போஹைட்ரேட்களையே புரத ஆதாரங்களாக தவறாக எண்ணுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட இந்திய குழந்தைகளில் மூன்றில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அமெரிக்கா அறிவித்துள்ள புதிய உணவு முறை இந்தியாவுக்கும் பொருந்தும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.








