Home உலகம் “கிரீன்லாந்தைச் சுற்றி உலக அதிர்ச்சி! அமெரிக்காவுக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை”

“கிரீன்லாந்தைச் சுற்றி உலக அதிர்ச்சி! அமெரிக்காவுக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை”

கிரீன்லாந்தில் அமெரிக்க படைகள் நுழைந்தால், உடனடியாக அவற்றை சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு டென்மார்க் அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

கனடாவுக்கு அருகில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவுப் பகுதி, பல ஆண்டுகளாக டென்மார்க் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட தன்னாட்சி பிரதேசமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலத்தின் அடியில் கச்சா எண்ணெய் மற்றும் உலகின் மிகச் சில இடங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், இந்த பகுதி பல ஆண்டுகளாகவே அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தச் சூழலில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும், கிரீன்லாந்தை விலைக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். இதற்கு டென்மார்க் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

ஆனால் சமீபத்தில், “கிரீன்லாந்தை எங்களுக்கு விற்க டென்மார்க் முன்வரவில்லை என்றாலும், அதை நாங்கள் வாங்குவோம் அல்லது வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொள்வோம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த கருத்து, நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளையே அதிர்ச்சியடைய வைத்த நிலையில், கிரீன்லாந்து மீது அமெரிக்கா எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஆறு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டன.

ஆனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அமைதியான வழியில் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்வது முதல், ராணுவத்தை அனுப்பி அந்த தீவை கைப்பற்றுவது வரை அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக, கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், கிரீன்லாந்தில் அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கினால், அந்த படைகளை சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கி டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முறையான போர் அறிவிப்பு இல்லாமலேயே படையெடுக்கும் படைகள் மீது உடனடியாக எதிர்தாக்குதல் நடத்த வழிவகுக்கும் 1952 ஆம் ஆண்டு சட்ட விதியை பயன்படுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கிடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.