Home உலகம் டைம் டிராவல் உண்மையா? புத்தாண்டு நாளில் கடந்த காலத்துக்குச் செல்லும் விமானங்கள்!

டைம் டிராவல் உண்மையா? புத்தாண்டு நாளில் கடந்த காலத்துக்குச் செல்லும் விமானங்கள்!

உலகமே புதிய ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடி வரும் வேளையில், டைம் டிராவலைப் போல மீண்டும் 2025ஆம் ஆண்டின் கடைசி நாளுக்கு பயணம் செய்தால் எப்படி இருக்கும்? அப்படியான பயணங்கள் உண்மையில் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடினாலும், புவியியல் அமைப்புகளின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் புத்தாண்டு பிறக்கும் நேரம் மாறுபடுகிறது. அந்த வகையில், புத்தாண்டை முதன்முதலில் வரவேற்கும் பகுதியாக கிறிஸ்மஸ் தீவுகள் என அழைக்கப்படும் கிரிபாட்டி குடியரசு உள்ளது.

இந்திய நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி மாலை 3:30 மணிக்கே இங்கு புத்தாண்டு பிறக்கிறது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கொரிய தீபகற்ப நாடுகளில் புத்தாண்டு பிறக்கிறது.

கிறிஸ்மஸ் தீவுகளில் புத்தாண்டு பிறந்து 24 மணி நேரம் கழித்தே அமெரிக்காவின் பேக்கர் மற்றும் ஹவ்லாந்த் தீவுகளில் புத்தாண்டு பிறக்கிறது. இந்த தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாடு தோறும் மாறுபடும் நேர வேறுபாட்டால் சில விமானப் பயணங்களும் சுவாரசியமாக மாறுகின்றன. உதாரணமாக, பசிபிக் பெருங்கடலின் ஒருபுறத்தில் உள்ள ஆசிய நாடுகளிலிருந்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தின் அதிகாலையில் புறப்படும் ஒரு விமானம், பசிபிக் பெருங்கடலின் மறுபுறத்தில் உள்ள அமெரிக்க நகரங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி மாலையிலேயே சென்றடைகிறது.

தைவானில் புத்தாண்டு தினம் அதிகாலை 12.05 மணிக்கு புறப்படும் ஸ்டார்க்ஸ் விமானம், சான் பிரான்சிஸ்கோ நகருக்கு டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், ஹாங்காங்கில் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 12:30 மணிக்கு புறப்படும் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு முந்தைய நாள் மாலை 8:55 மணிக்கு சென்றடைகிறது.

இதேபோல், உலகளவில் புத்தாண்டு தினத்தில் ஏழு விமானங்கள் இந்த “டைம் டிராவல்” போன்ற பயணத்தை மேற்கொள்கின்றன. இவ்வாறான பயணங்களை மேற்கொள்வோர் இரண்டு முறை புத்தாண்டை வரவேற்கும் அனுபவத்தையும் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.