கடந்த 2006 ஆம் ஆண்டு சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாலங்டோங் குகையில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன அதில் சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதன் மீது நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் புதிய மனித இனம் இருந்ததற்கான ஆதாரமாக இருப்பதாக தெரிவிக்கிறது. பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுடன் சேர்ந்து வேறு சில இனங்களும் உருவானதாக பலரால் நம்பப்படுகிறது.
அவையெல்லாம் காலப்போக்கில் அழிந்து, மனித இனம் மட்டும் தனித்து இருக்கிறோம். இதை விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.
2006ல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில், 16 மனிதர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் கிடைத்தன. இப்போது அந்த மண்டை ஓடுகளின் பற்களை ஆய்வு செய்திருக்கின்றனர்.
அதில் 16 மனித பற்கள் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளில் மூன்றாவது கடைவாய் பற்கள் சிறியதாக உள்ளன. இது நவீன மனிதர்களில் பொதுவாக காணப்படும் ஒரு சிறப்பு.
ஆனால் கடைவாய் பற்களின் வேர்கள் தடிமனாகவும் வலுவாகவும் இருந்திருக்கின்றன. இதுதான் விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில் சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆசியாவிற்கு குடிப்பெயர்ந்த ஹோமோ எரக்டஸ் போன்ற பழமையான மனித இனத்திற்குதான் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.
அப்படி எனில் ஒரே இனத்தில் ஒரு பல் நவீன மனிதர்களை போலவும் ஒரு பல் பழங்கால மனிதர்களை போலவும் இருக்கிறது என அர்த்தம். இது எப்படி சாத்தியம்? அப்படி எனில் நாம் அறியாத நாம் கண்டுபிடிக்காத ஒரு தனி மனித இனம் வாழ்ந்து மறைந்திருக்கிறதா என்று கேள்வி எழுக்கிறது.
பற்களில் மட்டுமல்லாமல் தாடை மற்றும் உடல் அமைப்புகளிலும் இந்த முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே இது தொடர்பான ஆய்வை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.








