பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்குமாறு டெல்லி பல்கலை கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
டெல்லி பல்கலை கழகத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு பிரதமர் மோடி பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் விவரங்களை வழங்குமாறு மத்திய தகவல் ஆணையத்திடம் நீரஜ் என்பவர் கேட்டிருந்தார். இதனை கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்ற மத்திய தகவல் ஆணையம் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்குமாறு டெல்லி பல்கலை கழகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்புடைய பட்டப்படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க தயார் என்றும் ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்பில்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக ஆவணங்களை வழங்க முடியாது எனவும் டெல்லி பல்கலைக்கழகம் கூறியிருந்தது.
தகவல் அறியும் உரிமையை விட ஒரு தனிப்பட்ட நபரின் ஆவண உரிமை உயர்வானது எனவும் வாதித்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வழங்குமாறு டெல்லி பல்கலை கழகத்திற்கு மத்திய தகவல் ஆணையம்
பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது








