இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வெளியிட்டுள்ள அறிவிப்பில், யூபிஐ பரிவர்த்தனைகளின் வரம்பை அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனிநபரிடமிருந்து வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மூலதன சந்தையில் முதலீடு செய்தல், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். மேலும், 24 மணி நேரத்தில் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கான வரம்பு ஒரு நாளில் அதிகபட்சம் 6 லட்சம் ரூபாயாகவும், கடன் மற்றும் மாதத்தவணைகளுக்கான (EMI) பரிவர்த்தனை வரம்பு ஒரு நாளில் 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நகைகள் வாங்க யூபிஐ மூலம் பயனர்கள் ஒரு நாளில் அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். வங்கி டெபாசிட் கால வைப்புகளுக்கான பரிவர்த்தனை வரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, வணிகர்களுக்கும் பயனளிக்கும் என்று NPCI குறிப்பிட்டுள்ளது. ஆனால் தனிநபரிடமிருந்து தனிநபருக்கான பரிவர்த்தனைகளின் வரம்பு முன்பு போலவே நாளொன்றுக்கு 1 லட்சம் ரூபாயாகவே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரம்புகள் வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








