Home திரையுலகம் “90 கலைஞர்கள் தேர்வு: கலைமாமணி விருதுகள் பெற்றவர்கள் யார் யார்?”

“90 கலைஞர்கள் தேர்வு: கலைமாமணி விருதுகள் பெற்றவர்கள் யார் யார்?”

தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை இன்று அறிவித்துள்ளது.

மொத்தம் 90 கலைஞர்களும், மூன்று சிறப்பு விருதுகளும், இரண்டு கலை நிறுவனங்களும் இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2021ம் ஆண்டு கலைமாமணி விருதைப் பெற்றவர்களில் முக்கியமாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, மற்றும் சண்டைப் பயிற்சியாளர் சுப்புராயன் ஆகியோர் திரைப்படப் பிரிவில் விருதுபெற்றுள்ளனர்.

அதே ஆண்டு இயல் பிரிவில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, இசைப் பிரிவில் பாபநாசம் அசோக் ரமணி, நாடகப் பிரிவில் பூச்சி எஸ்.முருகன் மற்றும் கிராமிய கலைகளில் பலரும் விருது பெற்றுள்ளனர்.

2022ம் ஆண்டு கலைமாமணி விருதை பாடலாசிரியர் விவேகா, திரைப்பட செய்தியாளர் டைமண்ட் பாபு, நடிகர் விக்ரம் பிருப்பு உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

2023ம் ஆண்டு விருதுபெற்றவர்களில் ‘காக்கா முட்டை’ திரைப்படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஜார்ஜ் மரியான், பின்னணி பாடகி சுவேதா மோகன், மற்றும் நடன இயக்குநர் தாண்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் மூன்று சிறப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் முருகேச பாண்டியனுக்கு பாரதியார் விருது, பிரபல பின்னணி பாடகர் டாக்டர் கே.ஜே.யேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, நாட்டியக் கலைஞர் முத்து கண்ணம்மாளுக்கு பாலசரஸ்வதி விருது வழங்கப்பட உள்ளது.

அதேபோல் சிறந்த கலை நிறுவன விருதாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இயங்கி வரும் தமிழ் இசை சங்கமும், மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைமாமணி விருதுகளை வழங்க உள்ளார்.