Home திரையுலகம் “ஆடை சர்ச்சை கிளம்பிய நிலையில் சமூக வலைதளத்திற்கு சாய் பல்லவியின் தெளிவான விளக்கம்”

“ஆடை சர்ச்சை கிளம்பிய நிலையில் சமூக வலைதளத்திற்கு சாய் பல்லவியின் தெளிவான விளக்கம்”

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. நடிகர்களுக்கு எப்படி தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே போன்று நடிகை சாய் பல்லவிக்கும் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் இவர் ஒரு சிறந்த நடிகையாக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த கார்கி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் சாய் பல்லவிக்கும் பெயர் வாங்கி கொடுத்தது.

சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தில் நடித்திருந்த சாய் பல்லவி நடிப்பை பார்த்து தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தமிழில் முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ள அவர் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற நடிகையாக உள்ளார்.

கிளாமர் காட்சிகளில் தோன்றாத நடிகையாக சாய் பல்லவி இருந்து வருவதால் அவருக்கு ரசிகைகளும் ஏராளமானோர் உள்ளனர். இதனிடையே சாய் பல்லவியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பேசு பொருளாகி மாறியது.

நடிகை சாய் பல்லவி தனது சகோதரியுடன் கடற்கரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் சாய் பல்லவி அணிந்திருந்த ஆடை குறித்து சமூக வலைதளத்தில் சிலர் விமர்சனங்களை வைத்தனர்.

சினிமாவில் மட்டும் ஹோம்லி கேர்ளாக வந்துவிட்டு நிஜ வாழ்க்கையில் அரைகுறை ஆடைகளுடன் இருக்கிறார் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டனர். ஆனால் இது சாய் பல்லவியின் உண்மையான புகைப்படம் இல்லை என்றும் இது ஏஐ புகைப்படம் எனவும் குறிப்பிட்டனர்.

இந்த விவாதங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த நிலையில் அது தொடர்பாக சாய் பல்லவி விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் தனது சகோதரியுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற முழு வீடியோவையும் வெளியிட்டார்.

அதில் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம் தன்னுடைய உண்மையான புகைப்படம் தான் என்றும் அது ஏஐ புகைப்படம் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும் திரைப்பிரபலங்களின் சினிமா வாழ்க்கை வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என குறிப்பிட்டுள்ள சாய் பல்லவி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது தனது உரிமை என்றும் தெரிவித்தார்.

தன்னுடைய தோற்றத்தை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமோ அதை செய்வதற்கு தனக்கு முழு சுதந்திரம் உள்ளது என்றும் நடிகை சாய் பல்லவி கூறினார். இதில் யாரும் தலையிட முடியாது என்றும் நடிகை சாய் பல்லவி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்களின் ஆடை சுதந்திரம் குறித்து நேரடியாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என தீர்மானிக்க வேண்டியது அந்த பெண்தான் என தனது விளக்கத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக சமூகத்திற்கு கூறியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.