“டிக்டாக் நண்பர்களே!” என்ற டயலாக் கேட்டவுடன் நெட்டிசன்களின் நினைவிற்கு வருபவர் ஜி.பி. முத்து. அவரின் நெல்லை உச்சரிப்பு, நகைச்சுவையான பேச்சு, நையாண்டி வீடியோக்கள் ஆகியவற்றால் டிக்டாக்கில் பெரிய ரசிகர் பட்டாளம் பெற்றவர்.
டிக்டாக் தடை செய்யப்பட்டதும், பல டிக்டாக் பயனர்கள் YouTube, Instagram போன்ற தளங்களுக்கு மாறினர். அந்த வகையில் ஜி.பி. முத்துவும் இந்த தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தார்.
ஸ்டுடியோ கிடையாது, கவர்ச்சியான புகைப்படங்கள் கிடையாது, எடிட்டிங் கிடையாது, விதவிதமான உடைகள் கிடையாது, “சப்ஸ்கிரைப் பண்ணுங்க” என்ற கோரிக்கையும் இல்லை — இருந்தாலும், அவர் பதிவிட்ட வீடியோக்கள் அனைத்தும் வைரலாகின.
தற்போது மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜி.பி. முத்துவின் YouTube சேனலை பின்தொடர்ந்து வருகிறார்கள். YouTubeல் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடும் நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கிண்டல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குடும்ப பிரச்சனை காரணமாக ஜி.பி. முத்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் நலம்பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி. முத்து மூன்றாவது வகுப்பு வரை தான் படித்துள்ளார். 10 வயதிலேயே வேலைக்கு சென்று சம்பாதிக்கத் தொடங்கினார். 28-வது வயதில் தனது சொந்த தொழிலை ஆரம்பித்தார்.
ஒரு விபத்தில் தம்பியை இழந்தபின், அவரது குடும்பத்தையும் சேர்த்து பார்த்து வரத் தொடங்கினார். தொழிலிலும் சில சருக்கல்கள், நெருக்கடிகளையும் சந்தித்தார். அந்த பிரச்சனைகளிலிருந்து மனதை திசை திருப்பும் நோக்கில் டிக்டாக் வீடியோக்களைத் தொடங்கினார். அதுவே அவருக்கு பெரும் பிரபலத்தையும், பின்னர் ரியாலிட்டி ஷோக்களிலும், சினிமாவிலும் வாய்ப்புகளையும் வழங்கியது.
அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவதாக இருந்த ஜி.பி. முத்து மீது தற்போது அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி அடுத்த பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி அமுதா. கடந்த 2ஆம் தேதி மாலை, நடிகர் ஜி.பி. முத்துவின் இரண்டு மகன்கள் அதே தெருவில் வலது பக்கமும் இடது பக்கமுமாக நடந்துசென்றனர்.
அப்போது, அங்கேயே வீட்டிற்கு வந்த முத்து மகேஷ், “இப்படி ஏன் செல்கிறீர்கள்?” என்று சிறுவர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இரண்டு சிறுவர்களும் அவரிடம் முறைத்துவிட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஜி.பி. முத்து அங்கு வந்து, முத்து மகேஷை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜி.பி. முத்துவின் மனைவியும், உறவினர்களும் இணைந்து, முத்து மகேஷ் மற்றும் அவரது மனைவி அமுதாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அமுதாவின் வலது பக்கக் கடவாய் பல் உடைந்ததுடன், பின்புறத் தலைப்பகுதி மற்றும் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தகவல்.
அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அமுதாவை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார், நடிகர் ஜி.பி. முத்து, அவரது மனைவி அஜிதா, உறவினர்கள் அனிதா மற்றும் கணேசன் ஆகிய நால்வர்மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








