பெண்களிடம் அநாகரிகமான கேள்விகள் கேட்பது சாதாரணமானதாக மாறிவிடக் கூடாது என நடிகை கௌரி கிஷன் தெரிவித்துள்ளார். ஒரு ஆண் நடிகரிடம் இப்படிப்பட்ட கேள்விகளை யாராவது கேட்டிருக்கிறார்களா? அவர்களின் உடல் அமைப்பைப் பற்றி அல்லது தோற்றம் குறித்து எதையும் பேசலாம் என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஒரு நடிகர் செய்தால் அது ‘ஓகே’ என்று சொல்லப்படுகின்றது. ஆனால் ஒரு பெண் செய்தால் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு? அந்த அளவுகோலை யார் நிர்ணயிக்கிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“என் உடல், என் விருப்பம். நான் எப்படிச் இருப்பது என் தேர்வு. யாருக்கும் அதில் தலையிட உரிமை இல்லை. என் உடல் எடையைப் பற்றிய கேள்வி 10 நிமிடங்கள் தொடர்ந்தது. உனக்கு தமிழ் புரியவில்லை என்பதால் நான் தமிழில் பேசினேன். நான் கோபப்படும்போது வழக்கமாக அழுவேன், தடுக்கத்தடுக்க பேசுவேன். ஆனால் நேற்றோ, எனக்கே தெரியாமல் ஒரு வலிமை வந்து பேச வைத்தது,” என கௌரி கிஷன் உணர்ச்சியுடன் கூறினார்.
அவர் மேலும், “அந்தக் கேள்வியை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது. இன்று இதை ஜோக் என்று விட்டுவிட்டால், நாளை இன்னும் மோசமான விஷயங்கள் — பாலியல் வன்முறை குறித்தும் — ‘ஜோக்’ என்று பேச ஆரம்பிப்பார்கள். இதே இடத்தில்தான் அந்த மனப்பான்மை தொடங்குகிறது. அவர்களது பார்வையில் ‘பெண்’ என்றால் உடலே முக்கியம்; அதுதான் அவர்களுடைய எண்ணம்,” எனவும் கூறினார்.
“அனைத்து பத்திரிகையாளர்களும் அப்படி அல்ல. உங்களிலே பலர் கடின உழைப்புடன் பணியாற்றுகிறீர்கள். ஆனால் சிலர் காட்டும் இந்த நடத்தைகள், அந்த நல்ல பத்திரிகையாளர்களுக்கே அவமானம். நான் பேச முயன்றபோது கூட என்னை நிறுத்த முயன்றார்கள். ஒரு மனிதராக மற்றவருக்கு பேசும் இடம் கொடுப்பது அடிப்படை மரியாதை; அது கூட இல்லை.
அந்த தருணத்தில் நான் உதவியற்றவளாக இருந்தேன். என் கவனம் என் கதாபாத்திரங்களிலும் ,என் நடிப்பிலும் தான் இருக்கும். அதனால்தான் இயக்குநர்கள் என்னை தேர்வு செய்கிறார்கள். அப்படியிருக்க, யார் என் உடலைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள்? இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல; இதுபோன்ற கேள்விகள் சாதாரணமாக மாறக் கூடாது,” என அவர் வலியுறுத்தினார்.
பட விளம்பர நிகழ்ச்சியின் போது நடிகை கௌரி கிஷனிடம், அவரின் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேள்வி எழுப்பப்பட்டதை நடிகை குஷ்பு கடுமையாகக் கண்டித்துள்ளார். பெண் நடிகையின் உடல் எடை குறித்து கேள்வி எழுப்புவது அவமானகரமானது என்றும், மரியாதை பெற விரும்பினால் முதலில் மரியாதை கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சூழ்நிலையில் தைரியமாக தன்னுடைய கருத்தை வெளிப்படுத்திய கௌரி கிஷனுக்கு குஷ்பு பாராட்டும் தெரிவித்துள்ளார்.








