Home தமிழகம் “சிறுவனின் ஒரு முடிவு… பலரின் நெஞ்சை தொட்டது!”

“சிறுவனின் ஒரு முடிவு… பலரின் நெஞ்சை தொட்டது!”

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே, தனியார் ஏடிஎம் அறை குப்பைத்தொட்டியில் இருந்த ரூ.50,000 பணத்தை எடுத்து காவல்துறையில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே உள்ள வளையக்கானூர் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன்–புனிதா தம்பதியர் கட்டிடக் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஜினார்த் என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்ளான்.

இன்று மாலை சுமார் 8.00 மணியளவில் சேலம்–கோவை புறவழிச்சாலையில் உள்ள வட்டமலை பகுதியில் இயங்கி வரும் தனியார் ஏடிஎம்மில் பணம் எடுக்க அவர்கள் சென்றனர். அப்போது ஏடிஎம் அறையில் ஜினார்த் மட்டும் சென்று பணம் எடுக்கும் பணியை செய்தான்.

அப்போது ஏடிஎம் மெஷின் அருகில், ரசீது கிழித்து போட வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் ரூ.50,000 (500-ரூபாய் நோட்டுக் கட்டு) சீல் உடைக்கப்படாத நிலையில் இருப்பதை கண்டு அவன் அதிர்ச்சி அடைந்தான்.

அதை உடனே வெளியில் இருந்த தனது தந்தைக்கு கொடுத்தான். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் சேர்ந்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆய்வாளர் மாதேஸ்வரனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன், சிறுவனுக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசளித்து பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். போலீசாரும் அனைவரும் சிறுவனைப் பாராட்டினர். இதை அறிந்த பொதுமக்களும் மாணவனை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.