Home தமிழகம் “ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு”

“ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு”

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 5.45 மணியளவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக, அதிகாலை 4.30 மணியளவில் உற்சவர் நம்பெருமாள் திரு ஆபரணங்கள் அணிந்து சிம்மகதியில் மூலஸ்தானத்திலிருந்து புறப்படுவார்.

இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் வளாகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடைபெறுகிறது.

பக்தர்கள் வரிசையாக செல்ல இரும்பு பேரிகேடுகள், நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.