Home தமிழகம் “இன்ஸ்டா ரீல்ஸில் வந்த ஐடியா… கின்னஸ் சாதனையாக மாறிய அதிசயம்!”

“இன்ஸ்டா ரீல்ஸில் வந்த ஐடியா… கின்னஸ் சாதனையாக மாறிய அதிசயம்!”

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜீவானந்தம், வெறும் 12 கிராம் எடையிலும் தீப்பெட்டி அளவிலும் மிகச்சிறிய வாஷிங் மெஷினை வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

அரசுப் பேருந்து ஓட்டுநரான பூபதியின் மகனான ஜீவானந்தம், தற்போது சேலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். மருத்துவத் துறையை தேர்வு செய்திருந்தாலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விஞ்ஞான ரீதியான இந்த அபூர்வமான கண்டுபிடிப்பை அவர் நிகழ்த்தியுள்ளார்.

26 மில்லி மீட்டர் அளவிலும் 12 கிராம் எடையிலும் வடிவமைக்கப்பட்ட இந்த வாஷிங் மெஷின், உலகின் மிகச்சிறிய சலவை இயந்திரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பித்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டு, மார்ச் மாதத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜீவானந்தம் தெரிவித்துள்ளார். இந்த சாதனைக்காக கல்லூரி நிர்வாகமும் முழு ஆதரவு வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து பேசிய ஜீவானந்தம்,
“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும்போது இந்த ஐடியா தோன்றியது. அதை என் சீனியர்களிடம் பகிர்ந்தபோது அவர்கள் ஊக்கமளித்தனர். வீட்டிலேயே முயற்சி செய்து இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது. எதிர்காலத்திலும் மேலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்ய விரும்புகிறேன். இதற்கு தமிழக அரசு கூடுதல் ஆதரவு வழங்கும் என நம்புகிறேன்,” என தெரிவித்தார்.

மேலும், மருத்துவத் துறையை தேர்வு செய்தது தந்தையின் விருப்பத்திற்காக என்றும், தனிப்பட்ட ஆர்வம் இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் துறையில்தான் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, ஜீவானந்தத்தின் தந்தை பூபதி கூறுகையில்,
“என் மகனை மருத்துவம் படிக்கச் சேர்த்தேன். ஆனால், அவனுக்கு அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் மீது இயல்பான ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வத்தின் மூலம் இன்று உலக சாதனை படைத்துள்ளான். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என பெருமிதம் தெரிவித்தார்.

இந்த சாதனை காரணமாக பூங்குளம் கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஜீவானந்தத்துக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சிறிய கிராமத்திலிருந்து உலக சாதனை நிகழ்த்திய இந்த மாணவரின் முயற்சி, இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.