புத்தாண்டு விடுமுறை தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். பொதுவாக புத்தாண்டு பிறப்பின்போது எவ்வாறு மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடி கொண்டாடுவார்களோ, அதேபோல இந்த புத்தாண்டு தினத்திலும் ஏராளமானோர் அங்கு வருகை தந்துள்ளனர்.
புத்தாண்டு தினம் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் புதிய ஆண்டை வரவேற்கும் நாளாக உள்ளது. இந்த நாளில் பலர் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். அதேபோல், பலர் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு சென்று, இன்றைய நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் நேரத்தில் பொழுதைக் கழிப்பதற்காகவும், ஓய்வெடுக்கவும் சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கேசவன் காட்டும் காட்சிகளில், இன்றைய தினம் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்படுவது தெளிவாக தெரிகிறது.
வங்கக் கடலின் அழகை ரசிப்பதற்காகவும், மெரினா கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு இடங்களை பார்வையிடுவதற்காகவும் மக்கள் இங்கு வருகை தந்துள்ளனர். மேலும், வியாபாரிகள் விற்பனை செய்யும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை தங்களது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்காகவும், பல்வேறு உணவுப் பொருட்களை வாங்கி சுவைப்பதற்காகவும் மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர்.
பரபரப்பான வாழ்க்கை சூழலில் வாழும் மக்கள், மெரினாவிற்கு வருவதன் மூலம் சற்று இளைப்பாறும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும், புத்தாண்டு தினத்தில் குடும்பத்தினருடன் இவ்வாறு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கடலை நோக்கி சென்று, கடற்கரையை ரசித்துவிட்டு மீண்டும் பேருந்து நிறுத்தங்களுக்கு திரும்பிச் செல்லும் காட்சிகளையும் காண முடிகிறது. இதேபோல், கண்ணகி சிலை பகுதி, கலங்கரை விளக்கம் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
மாலை 4 மணிக்கு பிறகு கடற்கரைக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனுடன், காவல்துறையும் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு, சாலையை கடக்கும் மக்கள் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய தினம் வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், சென்னையில் தங்கி பணியாற்றும் வெளிமாநில மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக மெரினாவில் அதிக அளவில் குவிந்திருப்பதையும் காண முடிகிறது. இதனால், சென்னை மக்கள் மட்டுமின்றி வெளிமாநில மக்களும் பெருமளவில் மெரினா கடற்கரையில் திரண்டுள்ளனர்.
புத்தாண்டு நாளில் முதலில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பிறகு, இதுபோன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு வருவது குடும்பத்தினருடன் நேரம் செலவிட சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
உழைப்பாளர் சிலை சந்திப்பு பகுதி முன்பாகவும், காமராஜர் சாலையிலும் மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் காட்சிகள் காணப்படுகின்றன. மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலை தற்போது போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. காரணம், அதிகமான மக்கள் மெரினாவை நோக்கி வருகை தருவதுதான்.
மாலை நேரம் வரை இன்னும் அதிகமான மக்கள் வருகை தர வாய்ப்புள்ளதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளிக்கிறது. குடும்பத்துடன் உற்சாகமாக பொழுதைக் கழிப்பதற்காக மக்கள் இங்கு பெருந்திரளாக வருகை தந்துள்ளனர்.








