Home தமிழகம் ”சென்னை நெரிசலுக்கு விடை: மத்திய கைலாஷ் எல்-வடிவ மேம்பாலம் தயாராகிறது”!

”சென்னை நெரிசலுக்கு விடை: மத்திய கைலாஷ் எல்-வடிவ மேம்பாலம் தயாராகிறது”!

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்-வடிவ மேம்பாலத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து அடையாறு, கிண்டி, சிறுசேரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல மூன்று சாலைகள் பிரிகின்றன. இதனால், இந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

அதனால் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையால் எல்-வடிவ மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.60 கோடி மதிப்பீட்டில், 650 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தற்போது 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இறுதிக்கட்ட மேல்தளம் அமைப்பதற்கான கட்டமைப்புகள், மத்திய கைலாஷ் சந்திப்பில் இணைப்பு பகுதிகள் மற்றும் பட்டேல் சாலையின் பாலம் ஏறும் முகப்பு பகுதிகளில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஐஐடி மேம்பாலத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால், கிண்டியிலிருந்து வரும் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் வலதுபுறமாக திரும்பி, ஓஎம்ஆர் சாலையில் நேரடியாக பயணம் செய்ய முடியும்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, இந்த எல்-வடிவ மேம்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.