நீங்கள் Facebook, Instagram பயன்படுத்துபவரா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான். உங்களுக்கே தெரியாமல், உங்களை ஒரு கண் 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்.
மார்க் ஜூக்கர்பெர்கின் மெட்டா நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய Privacy Policy தற்போது உலகளவில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மெட்டா நிறுவனம் தங்களுடைய செயலிகளில் Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தை அதிகமாக இணைத்துள்ளது. இந்த AI என்ன செய்கிறது என்றால், நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்கிறீர்கள், எந்த புகைப்படங்களை லைக் செய்கிறீர்கள், Instagram-ல் அதிகமாக எதை தேடுகிறீர்கள் என்பதையெல்லாம் கவனித்து பதிவு செய்து வைத்துக்கொள்கிறது.
அதுமட்டுமல்ல, Meta AI-யுடன் நீங்கள் சாட் செய்யும் போது, நீங்கள் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும், அந்த உரையாடலின் கருத்தையும் இது கவனித்து சேமிக்கிறது. “நாங்கள் உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை படிக்க மாட்டோம்” என்று மெட்டா கூறினாலும், நீங்கள் என்ன பற்றி பேசுகிறீர்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் உங்களுக்கு விளம்பரங்களை காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதை இன்னும் எளிமையாக சொல்வதானால், உதாரணத்திற்கு நீங்கள் Meta AI-யிடம் “ஊட்டிக்கு டூர் போவது எப்படி?” என்று சாதாரணமாக கேட்டாலே போதும். அடுத்த நிமிஷமே உங்கள் Facebook, Instagram feed-ல் டிராவல் பேக் விளம்பரம், ஹோட்டல் விளம்பரம், டூர் பேக்கேஜ் விளம்பரம் என்று வரிசையாக தோன்றும்.
“உங்களுக்கு பிடித்ததை மட்டுமே காட்டுகிறோம்” என்று மெட்டா இதை நியாயப்படுத்தினாலும், இது மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களை உளவு பார்ப்பது போன்ற செயல் என்ற குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. இது சும்மா சமூக ஊடகங்களில் பேசப்படும் விஷயம் மட்டும் அல்ல. அமெரிக்காவிலேயே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தனி உரிமை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட 36-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து, அமெரிக்க வர்த்தக ஆணையத்தில் (Federal Trade Commission) மெட்டா மீது புகார் அளித்துள்ளன. மக்களின் ரகசிய உரையாடல்களை பயன்படுத்தி வியாபாரம் செய்வது அநியாயம், இது சட்ட விரோதம் என்று அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு மெட்டா தரப்பில், “நாங்கள் இதை கடந்த ஆண்டே அறிவித்துள்ளோம். இதில் எந்த தவறும் இல்லை” என்று கூலாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இனி நீங்கள் போனை திறந்தாலே, நீங்கள் என்ன பார்க்க வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்பதைக் கூட இந்த AI தான் முடிவு செய்யும் நிலை வரப்போகிறது.
இது தொழில்நுட்ப வளர்ச்சியா? அல்லது நம்ம தனி உரிமைக்கு ஒரு பெரிய ஆபத்தா?








