விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நிலவுகள் குறித்த ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லாக, சனிக் கிரகத்தின் சிறிய பனி உலகமான ‘என்செலடஸ்’ (Enceladus) குறித்த அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலவு தன்னைச் சுற்றி ஒரு பிரம்மாண்டமான மின்காந்த அலை வலையை (Electromagnetic Web) உருவாக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
5 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு பாதிப்பு:
நாசாவின் காசினி (Cassini) விண்கலம் கடந்த 13 ஆண்டுகளாகச் சேகரித்த தரவுகளை ஆய்வு செய்தபோது, என்செலடஸ் நிலவு சனிக் கிரகத்தின் காந்த மண்டலத்தில் சுமார் 5,04,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்காந்த அதிர்வுகளை ஏற்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இது அந்த நிலவின் ஆரத்தை விட 2,000 மடங்கு பெரியதாகும்.
நீர் ஊற்றுகளும் மின்சாரமும்:
இந்த நிலவின் தெற்குப் பகுதியில் உள்ள பனிப் பரப்பிற்கு அடியில் இருந்து பிரம்மாண்டமான நீர் ஊற்றுகள் மற்றும் தூசிகள் விண்வெளியில் பீய்ச்சி அடிக்கப்படுகின்றன. இவை விண்வெளியில் மின் ஊட்டம் (Electrically charged) பெற்று, சனிக் கிரகத்தின் காந்தப் புலத்துடன் மோதும்போது இந்த மின்காந்த அலைகள் உருவாகின்றன.
அல்ஃப்வென் விங்ஸ் (Alfvén wings):
இந்த மின்காந்த அலைகள் ‘அல்ஃப்வென் விங்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு சிக்கலான அமைப்பை உருவாக்குகின்றன. இது ஒரு இசைக்கருவியின் நரம்பில் ஏற்படும் அதிர்வுகளைப் போல, நிலவுக்கும் சனிக் கிரகத்தின் துருவங்களுக்கும் இடையே மின்காந்தப் பிணைப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் இந்தச் சிறிய நிலவு ஒரு ராட்சத ‘பிளானட்டரி ஸ்கேல் ஜெனரேட்டர்’ (Planetary-scale generator) போலச் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்கால ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்:
“இந்தச் சிறிய நிலவின் மின்காந்த தாக்கம் இவ்வளவு தூரம் பரவியிருப்பது இதுவே முதல்முறை கண்டறியப்பட்டுள்ளது,” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் நிலவுகள் மற்றும் சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்கு இந்தத் தகவல் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) 2040-களில் என்செலடஸ் நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள விண்கலன்கள் மூலம் இது குறித்து மேலும் பல ரகசியங்கள் வெளிவரக்கூடும்.








