சென்னை போரூர் – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
போரூர் ஜங்ஷனிலிருந்து வடபழனி வரை சுமார் 5.2 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாகவும், அது மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை ஓட்டம் திட்டத்தின் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் பணிகள் தற்போது கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடைந்துள்ளன.
பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை பயணம் செய்யும் பயணிகளுக்கு, வடபழனி வரை இணைப்பு வழங்கப்பட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பூந்தமல்லி – போரூர் வழித்தடம், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மெட்ரோ முதல் கட்ட வழித்தடத்துடன் இணைக்கப்படும். வடபழனி மெட்ரோ நிலையத்தில் பயணிகள் இறங்கிய பின்னர், அங்கிருந்து லிங்க் பிரிட்ஜ் மூலம் முதல் கட்ட மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பூந்தமல்லி மற்றும் போரூர் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், மெட்ரோ முதல் கட்ட வழித்தடத்தை பயன்படுத்தி சென்னை சென்ட்ரல், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும்.
போரூர் – வடபழனி இடையேயான இந்த வழித்தடத்தில் பல பகுதிகளில் டபுள் டெக்கர் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதால், பணிகள் சவாலான சூழலில் மேற்கொள்ளப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமார் 32 கிலோமீட்டர் நீளமான இந்தப் பகுதியில், கடுமையான சிரமங்களுக்கிடையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது ஆலோசகர்கள் இணைந்து கடினமாக உழைத்து பணிகளை நிறைவு செய்துள்ளனர்.
மேலும், உயர்மட்ட வழித்தடம், தடங்கள் அமைக்கும் பணிகள் மற்றும் மின்மயமாக்கல் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மெட்ரோ ரயிலை இயக்க முடிந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.








