இந்திய வாகன சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. விற்பனை வேகத்தில் பைக்குகளை ஸ்கூட்டர்கள் முந்தி உள்ளன.
இந்திய இருசக்கர வாகன சந்தையில் பைக்குகள் ஆரம்ப காலத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எரிபொருள் செலவு குறைவு மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்றவை என்பதே இதற்கான காரணங்கள். தற்போதும் இவை இந்திய இருசக்கர வாகன சந்தையில் சுமார் 68% பங்கையும், ஸ்கூட்டர்கள் 31% பங்களிப்பையும், மொபட்டுகள் 1% பங்களிப்பையும் பெற்றுள்ளன.
எனினும் விற்பனை வளர்ச்சி விகிதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பைக்குகளை ஸ்கூட்டர்கள் முந்தி உள்ளன. 2023ஆம் ஆண்டில் பைக்குகளின் விற்பனை வளர்ச்சி 9.2% ஆக இருந்தது, ஸ்கூட்டர்களின் விற்பனை வளர்ச்சி 9% ஆக இருந்தது. 2024ல் இதுமுறையே 14% மற்றும் 21% ஆக இருந்தது.
2025ல் முதல் 10 மாதங்களில் பைக்குகளின் விற்பனை வளர்ச்சி வீதம் ஒரு சதவீதம் குறைந்தது. ஆனால் ஸ்கூட்டர்களின் விற்பனை வளர்ச்சி வீதம் 10.7% ஆக இருந்தது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் அதிகம் விற்கும் இருசக்கர வாகனங்களில் பைக்குகளை ஸ்கூட்டர்கள் பின்னுக்கு தள்ளிவிடும் நிலை உள்ளது.
பெண்களின் பொருளாதார முன்னேற்றம், நெரிசல் மிகுந்த நகரங்களில் ஓட்ட எளிதானவை, பொருள் விநியோக சேவைக்கு ஏற்ற வாகனமாக இருப்பது, பராமரிப்பு செலவு குறைவு என்பன இதற்கான பல காரணங்கள். மேலும் மின்சார ஸ்கூட்டர்கள் வருகையும் அச்சந்தையின் வேகத்துக்கு காரணமாகிவிட்டது.
2026ல் ஸ்கூட்டர்களின் விற்பனை மேலும் வேகம் எடுக்கும் என்று பிரபல சந்தை மதிப்பீட்டு நிறுவனமான கேரேஜ் இக்ரா கணித்துள்ளது.








