Home தமிழகம் “அறுவை சிகிச்சையில் நடந்த தவறு… பெண்ணுக்கு நேர்ந்த கதி!”

“அறுவை சிகிச்சையில் நடந்த தவறு… பெண்ணுக்கு நேர்ந்த கதி!”

பிரசவத்தின் போது நடைபெற்ற தவறான அறுவை சிகிச்சையால் பெண்ணின் குடல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அரசிடம் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டியை சேர்ந்த முனியம்மாள், கடந்த டிசம்பர் மாதம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், முனியம்மாளின் குடலில் ஓட்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், தற்போது சேலம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மருத்துவர்கள் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும், இந்தியாவிலேயே அத்தகைய சிகிச்சை கிடையாது என்றும் கூறுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 40 நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முனியம்மாள், சிகிச்சைக்கு முன்பு 80 கிலோ எடையுடன் இருந்த நிலையில், தற்போது 57 கிலோவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடல் மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என்றும், தற்போது உள்ள குடலை இணைத்து வைத்து அதனை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதாக குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு தாயை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், குடல் மாற்று அறுவை சிகிச்சையை அரசு பொறுப்பேற்று நடத்தி, முனியம்மாளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், உயர்நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.