கோடீஸ்வர யாசகரை கண்டு மத்திய பிரதேச மாநிலமே வாய்விழந்து நிற்கிறது. மத்திய பிரதேசத்தில் யாசகம் எடுத்தே மூன்று கான்கிரீட் வீடுகள் கட்டி, சொகுசு கார் வாங்கி, அதை வட்டிக்கு விடுவதன் மூலம் பணம் சம்பாதித்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள ஒரு யாசகர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
சமீபத்தில் அம்மாநில அரசு தொடங்கிய இந்தூர் பிச்சைக்காரர் ஒழிப்பு பிரச்சாரத்தின் போது, இந்த கோடீஸ்வர யாசகர் மங்கிலால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநில அரசு மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, ஒரு படுக்கையறை கொண்ட வீட்டையும் இவர் இலவசமாக பெற்றுள்ளார்.
அத்துடன், மூன்று ஆட்டோக்கள் இவரது பெயரில் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு சொத்து சேர்த்த பின்னும், யாசகம் பெறுவதை நிறுத்தாமல், மரவண்டியை பயன்படுத்தி இந்தூரின் வீதிகளில் தொடர்ந்து யாசகம் பெற்று வருகிறார்.
தனது காருக்கு ஓட்டுநரை வைத்துள்ள மங்கிலால், காரில் சென்றபடியே கூட யாசகம் பெறுகிறார். தவறாமல் தினசரி 500 ரூபாய் யாசகம் பெற்றுவிடும் மங்கிலாலை, அப்பகுதியில் அறியாதவர்களே இல்லை என்றே சொல்லலாம்.
பலரும் அவருக்கு எதிராக புகார் அளித்ததைத் தொடர்ந்து, பிச்சை எடுப்பதை ஊக்குவிப்பவர்கள் அல்லது அதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








