Home வணிகம் ”ஆப்பிள் பழத்துக்கு வந்த சோதனை… விவசாயிகள் கவலை”!

”ஆப்பிள் பழத்துக்கு வந்த சோதனை… விவசாயிகள் கவலை”!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஆப்பிள் உற்பத்தி பாதியாக சரிந்துள்ளது.

எதிர்பாராத கனமழை, மோசமான வானிலை மற்றும் பூஞ்சை பாதிப்பு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் உற்பத்தி 50 விழுக்காடு குறைந்துள்ளது.

பனிப்பொழிவு கணிசமாக குறைந்துள்ளதால், ஆப்பிள் மரங்களுக்கு தேவையான குளிர்ச்சி நேரம் கிடைக்காமல் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுடன் இந்தியா மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக வெளிநாட்டு ஆப்பிள்களின் இறக்குமதி வரி 50 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்நாட்டு ஆப்பிள்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆல்டர்நேரியா உள்ளிட்ட பூஞ்சை நோய்கள் பரவுவதால் பழங்களின் தரமும் அளவும் 50 விழுக்காடு வரை குறைந்து வருகிறது.

ஆப்பிள் வணிகம் ஹிமாச்சலப் பிரதேச மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது. இது மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 4,500 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தருகிறது.

சுமார் 2.5 லட்சம் பேர் ஆப்பிள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்பிள் உற்பத்தி சரிவும், பூஞ்சை நோய் பாதிப்பும் காரணமாக 25 கிலோ ஆப்பிள்கள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை ₹2,500 லிருந்து ₹1,200 ஆக குறைந்துள்ளது. மேலும், ஒரு ஆப்பிளின் விலை ₹100 லிருந்து ₹60 முதல் ₹40 வரை குறைந்துள்ளது.

அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வெளிநாட்டு ஆப்பிள்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும், உள்நாட்டு ஆப்பிள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பூச்சிக்கொல்லிகள் வாங்குவதற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் ஆப்பிள் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.