Home திரையுலகம் ”கோவிலில் ரீல்ஸ் கலாச்சாரம் – மீண்டும் வெடித்த சர்ச்சை”!

”கோவிலில் ரீல்ஸ் கலாச்சாரம் – மீண்டும் வெடித்த சர்ச்சை”!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுமிதா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கி வரும் மதுமிதாவுக்கு 3 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 6,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ரீல்ஸ் கிரியேட்டராகவும், ரொமான்டிக் வீடியோ மேக்கராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மதுமிதாவின் வீடியோக்கள் லட்சக்கணக்கான வியூஸ்களை எளிதில் தொட்டுவிடுகின்றன.

சுற்றுலா செல்வது, சொகுசு ஹோட்டல்களில் உணவருந்துவது, கோவில்களுக்கு சென்று வழிபடுவது, பண்டிகைகளை கொண்டாடுவது, பூஜைகள் செய்வது, சினிமா பாடல்களுக்கு வாயசைத்து நடனம் ஆடுவது போன்ற தனது அன்றாட வாழ்க்கையையே கண்டென்டாக மாற்றி மதுமிதா பதிவிட்டு வந்துள்ளார். கழுத்து நிறைய நகைகளுடன், கை நிறைய கட்டுக்கட்டாக பணத்துடன் மதுமிதா தோன்றும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தனது வாழ்க்கையையே கண்டென்டாக மாற்றி இன்ஸ்டாகிராமில் வாழ்ந்து வந்த மதுமிதாவுக்கு, சமீபத்தில் அவர் பதிவிட்ட ஒரு வீடியோ பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் தானுமாலயன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே வடிவில் கருவறையில் காட்சி அளிப்பது சிறப்பாகும்.

இந்த கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த கோவிலில் கருவறை வளாகத்திற்குள் செல்போன்களை பயன்படுத்தவோ, புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுக்கவோ அனுமதி இல்லை. அதேபோல் கருவறையை படம் பிடிப்பதற்கும் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க கோவில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் மதுமிதா குடும்பத்துடன் இந்த கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். வழக்கம்போல் அந்த பயணத்தையும் அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். கோவில் கோபுரம், தேர், சாமி உலா வருவது, மாலை வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் நுழைவது போன்ற காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தனது மகளை அழைத்துக்கொண்டு கருவறையை நோக்கிச் சென்ற மதுமிதா, அங்கு நின்று சாமி கும்பிடுவதையும் கருவறை தெரியும் வகையிலும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுமிதா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோக்கு மில்லியன் கணக்கில் வியூஸ்கள் கிடைத்துள்ளன. அதோடு சமூக வலைத்தளங்களிலும் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இதைக் கண்ட பக்தர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் கருவறை அருகே நின்று எப்படி வீடியோ எடுக்க அனுமதி கிடைத்தது? அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் யாரும் இதை தடுக்கவில்லையா? தடையை மீறி எப்படி அவர் வீடியோ எடுக்க முடிந்தது? என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மேலும், தடையை மீறி வீடியோ எடுத்த மதுமிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், ரீல்ஸ் வீடியோ எடுத்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல முக்கிய கோவில்கள் ரீல்ஸ் கலாச்சாரத்தின் தாக்கத்தில் சிக்கி, தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகின்றன.

தஞ்சாவூர் பெரிய கோவில் போன்ற உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவிலில் கூட சினிமா பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமை கொண்ட கோவிலில் இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்பினர். அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் சிலர் நடனமாடி ரீல்ஸ் எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரீல்ஸ் வெறியர்களின் இந்த செயல், பக்தியோடு வழிபாட்டுக்காக வந்த மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், கோவில் மரபுகளை வெளிப்படையாக மீறுவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி மூன்று இளைஞர்கள் ரீல்ஸ் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவில் என்பது வழிபாட்டுக்கான புனித தளம். அது ரீல்ஸ் உருவாக்குவதற்கான மேடை அல்ல. விதிமுறைகளை மீறி, பக்தியையும் புனிதத்தையும் மறந்து சில இன்ஸ்டாகிராம் வெறியர்களால் எடுக்கப்படும் ரீல்ஸ் வீடியோக்கள், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை காயப்படுத்துவதாகவே பார்க்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.