Home தமிழகம் ”தகுதி உறுதி செய்யப்பட்டால் குடும்ப அட்டை மாற்றம் – உணவுத்துறை அமைச்சர்”!

”தகுதி உறுதி செய்யப்பட்டால் குடும்ப அட்டை மாற்றம் – உணவுத்துறை அமைச்சர்”!

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், தனது தொகுதியில் தகுதியான பல குடும்பங்கள் இன்னும் சர்க்கரை குடும்ப அட்டையிலேயே உள்ளதாகவும், அவர்களின் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டையாக மாற்றித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனால் அவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியதாக தெரிவித்தார்.

அந்த உதவி கிடைக்காத காரணத்தால் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் விளக்கினார். மேலும், தகுதி உள்ளவர்கள் சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தகுதி இல்லாமல் யாருக்கும் அட்டை மாற்றம் செய்ய முடியாது என்றும், அதே நேரத்தில் உண்மையில் தகுதி உள்ளவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதி உறுதி செய்யப்பட்டால், சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்தார்.