இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல். ராகுல் ஓய்வு பெறப்போவதாகும் தகவல்கள் தொடர்ந்து பரவி வந்தன. 33 வயதாகும் ராகுல் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார்.
இதன் காரணமாக அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அணியை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதனால் ராகுலின் ஓய்வுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து வந்தனர். இந்த நிலையில், தனது ஓய்வு குறித்து எழுந்த கேள்விகளுக்கு ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமீபத்திய பேட்டியில், “நீங்கள் உங்களுக்கே நேர்மையாக இருந்தால், அந்த முடிவு வரவேண்டிய நேரத்தில் வந்தே தீரும். அதை இழுத்தடிப்பதில் எந்த பயனும் இல்லை. எனது ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் சிறிது காலம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஓய்வு குறித்து நான் யோசித்தபோது, அது கடினமான முடிவாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கிரிக்கெட்டிற்கு அப்பாற்பட்டும் வாழ்க்கை உள்ளது.
நம் நாட்டிலும், உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறும். ஆனால் வாழ்க்கையில் இதைவிட முக்கியமான விஷயங்களும் இருக்கின்றன. இந்த மனநிலை எனக்கு எப்போதும் இருந்ததாகவே நினைக்கிறேன்.
ஆனால், என் முதல் குழந்தை பிறந்ததிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கும் என் பார்வை முற்றிலும் மாறிவிட்டது” எனவும் அவர் கூறியுள்ளார்.








