Home இந்தியா ”கட்டாய பிஎப் சம்பள உச்சவரம்பு உயர்வு பரிசீலனை: மத்திய அரசு ஆலோசனை”!

”கட்டாய பிஎப் சம்பள உச்சவரம்பு உயர்வு பரிசீலனை: மத்திய அரசு ஆலோசனை”!

கட்டாய பிஎப் (PF) பங்களிப்புக்கான சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், பணியாளர்களின் கையில் கிடைக்கும் டேக்-ஹோம் சம்பளத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

மத்திய அரசின் திட்டம் குறித்து விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு. நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் சுமார் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கட்டாய பிஎப் பங்களிப்புக்கான தற்போதைய சம்பள உச்சவரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டில் இந்த உச்சவரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த மாற்றம் குறித்து மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு காரணமாக, தற்போதைய பிஎப் பங்களிப்பு மற்றும் ஓய்வூதியத் தொகை போதுமானதாக இல்லை என தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

தற்போதுள்ள பென்ஷன் திட்டத்தின் கீழ், ஓய்வு பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மேலும், ரூ.15,000 அடிப்படை சம்பளம் என்ற உச்சவரம்பு காரணமாக, லட்சக்கணக்கான ஊழியர்கள் முறையான ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாமல் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்படும் நிலையும் காணப்படுகிறது.

தற்போது, ரூ.15,000 மற்றும் அதற்கு குறைவான அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு பிஎப் கட்டாயமாகும்; அதற்கு மேல் இருந்தால் அது கட்டாயமில்லை. மேலும், சம்பள உச்சவரம்பு ரூ.15,000 ஆக இருப்பதால், ஒருவரின் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ரூ.15,000-க்கு இணையான தொகை மட்டுமே ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% பிஎப் கணக்கிற்கு செல்கிறது. அதேபோல், நிறுவனமும் 12% தொகையை பங்களிப்பாக வழங்குகிறது. எனவே, சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் பிஎப் கணக்கில் சேரும் மொத்தத் தொகை கணிசமாக அதிகரிக்கும்.

இது அவர்களின் ஓய்வு கால சேமிப்பை உயர்த்துவதோடு, எதிர்காலத்தில் பெறப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.

மேலும், ரூ.15,000-க்கு மேல் சம்பளம் பெறும் தனியார் துறை ஊழியர்கள் பலர், விதிகளின் படி பிஎப் கட்டாயமில்லை என்பதால், எந்தவொரு ஓய்வூதியத் திட்டத்திலும் சேராமல் உள்ளனர்.

இந்த உச்சவரம்பு உயர்வு, அவர்களையும் சமூக பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டு வரும் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த மாற்றம் ஊழியர்களின் டேக்-ஹோம் சம்பளத்திலும் நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பு வெளியானால், அது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று தொழிலாளர் நலத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.