Home வணிகம் SGB-க்கு செக் வைத்த பட்ஜெட் 2026… யாருக்கு வரி, யாருக்கு விலக்கு?

SGB-க்கு செக் வைத்த பட்ஜெட் 2026… யாருக்கு வரி, யாருக்கு விலக்கு?

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பானதும், அதே நேரத்தில் அதிக லாபம் தரக்கூடிய முதலீடாகவும் நம்பப்பட்ட தங்கப் பத்திரத் திட்டம், அதாவது சாவரன் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bond – SGB) திட்டத்தில், மத்திய அரசு 2026 பட்ஜெட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்திருக்கும் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அதிர்ச்சி தகவல் இதுவாகும்.

இதுவரை நடைமுறையில் இருந்த விதிமுறையின்படி, நீங்கள் வாங்கிய தங்கப் பத்திரத்தை எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் வரை விற்காமல் வைத்திருந்தால், இறுதியில் கிடைக்கும் லாபத்திற்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.

இதுவே இந்த திட்டத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது.
ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில், அந்த வரி விலக்கு கதவு மூடப்பட்டுள்ளது.

ஆனால் இதில் ஒரு முக்கியமான ட்விஸ்ட் உள்ளது.

இந்த வரி விதி அனைவருக்கும் பொருந்தாது.
அப்படியானால், யாருக்கு வரி? யாருக்கு வரி விலக்கு?

ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் போது நேரடியாக விண்ணப்பித்து முதன்மை சந்தையில் தங்கப் பத்திரம் வாங்கியவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
நீங்கள் அந்த பத்திரத்தை எட்டு ஆண்டுகள் வரை வைத்திருந்தால், உங்களுக்கு கிடைக்கும் லாபத்திற்கு முன்னைய விதிப்படி வரி விலக்கு தொடரும். நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

ஆனால் ஆபத்து யாருக்கு தெரியுமா?

பங்கு சந்தை (Secondary Market) மூலம், அதாவது மற்ற முதலீட்டாளர்களிடமிருந்து தங்கப் பத்திரங்களை வாங்கியவர்களுக்குத்தான் இப்போது பெரிய அடி விழுந்துள்ளது.

இரண்டாம் நிலை சந்தையில் விலை குறைவாக கிடைக்கிறது என்று நீங்கள் SGB வாங்கியிருந்தால், அதை முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலும் கூட, இனிமேல் வரி சலுகை கிடையாது.
உங்களுக்கு கிடைக்கும் லாபத்திற்கு மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) கட்டியே ஆக வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை 2026 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

சரி, எட்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே பத்திரத்தை விற்றால் என்ன ஆகும்?
அதிலும் மாற்றம் உள்ளது.

ஒரு ஆண்டிற்குள் தங்கப் பத்திரத்தை விற்றால், உங்கள் வருமான வரி வரம்பு எதுவோ அதன் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும்.

ஒரு ஆண்டுக்கு மேல் எப்போது விற்றாலும், உங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 12.5 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும்.

இதற்கு மேலாக, தங்கப் பத்திரத்திற்கு அரசு வருடந்தோறும் வழங்கும் 2.5 சதவீத வட்டி வருமானத்திற்கும், வழக்கம்போல வரி விதிக்கப்படும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

சுருக்கமாகச் சொன்னால்,
உண்மையான நீண்டகால முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும்,
பங்கு சந்தையில் நடைபெறும் ட்ரேடிங்கை குறைக்கவும்,
இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, நீங்கள் பங்கு சந்தை மூலம் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவராக இருந்தால், ஏப்ரல் 1க்கு முன்பாகவே உங்கள் முதலீட்டு திட்டத்தை ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.