Home இந்தியா “ஏர் இந்தியா பயணிகளுக்கு எச்சரிக்கை – நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்”

“ஏர் இந்தியா பயணிகளுக்கு எச்சரிக்கை – நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்”

இந்தியாவில் விமானப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில், பல விமானங்கள் மீண்டும் மீண்டும் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டு வருவது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதிய தரவுகளை சமர்ப்பித்துள்ளது.

2024 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) மேற்கொண்ட பாதுகாப்பு தணிக்கையின் கீழ் ஆய்வு செய்யப்பட்ட 754 விமானங்களில், 377 விமானங்களில் ஒரே மாதிரியான தொழில்நுட்ப குறைபாடுகள் மீண்டும் மீண்டும் பதிவாகியுள்ளன. இது மொத்த விமானங்களின் சுமார் 50 சதவீதமாகும்.

இந்த பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை கொண்ட நிறுவனங்களாக இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா குழுமம் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, இண்டிகோ நிறுவனத்தின் விமானங்களில் அதிகமான தொழில்நுட்ப குறைபாடுகள் பதிவாகியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.

அதே நேரத்தில், இந்த தொழில்நுட்ப கோளாறுகளில் பெரும்பாலானவை விமானப் பாதுகாப்பை உடனடியாக பாதிக்காத, குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரிவைச் சேர்ந்தவை எனவும், இருக்கைகள், பொழுதுபோக்கு திரைகள், கேபின் உபகரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விமானப் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், மீண்டும் மீண்டும் குறைபாடுகள் கண்டறியப்படும் விமானங்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மற்றும் தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.