Home தமிழகம் திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 200 தொகுதி மாஸ்டர் பிளான்!

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 200 தொகுதி மாஸ்டர் பிளான்!

stalin-premalatha-meeting-dmdk-dmk-alliance-2026
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தது

சென்னை: தமிழக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மெகா கூட்டணி இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் முக்கிய சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர். சுமார் 20 வருடத் தேமுதிக வரலாற்றில், அக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறையாகும்.

கடந்த கால தோல்விகளும்.. தொண்டர்களின் விருப்பமும்!

கடந்த 2016 (மக்கள் நல கூட்டணி), 2019 (பாஜக), 2021 (அமமுக), மற்றும் 2024 (அதிமுக) எனத் தேமுதிக பங்கேற்ற கடந்த நான்கு தேர்தல்களும் தோல்வியிலேயே முடிந்தன. தவறான கூட்டணி முடிவுகளே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என அக்கட்சியினரிடையே பலத்த விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், வரவிருக்கும் 2026 தேர்தலில் “வெற்றி வாய்ப்புள்ள” கூட்டணியில் இணைய வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து, இந்த முடிவை பிரேமலதா எடுத்துள்ளார்.

எடப்பாடிக்குக் கொடுத்த பதிலடி?

கடந்த காலங்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, வாக்குறுதி அளித்தபடி மாநிலங்களவை (Rajya Sabha) சீட் வழங்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததாகப் புகார் எழுந்தது. இதற்குப் பாடம் புகட்டும் வகையிலும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுமே தேமுதிக தற்போது திமுக பக்கம் சாய்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

200 தொகுதிகளே இலக்கு – ஸ்டாலினின் வியூகம்

வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை திமுக நிர்ணயித்துள்ளது. கடந்த தேர்தல்களில் 5,000 முதல் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் கைநழுவிய தொகுதிகளை மீட்க, தேமுதிகவின் கணிசமான வாக்கு வங்கி திமுகவிற்குப் பெரும் பலமாக இருக்கும்.

“திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்” என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தேமுதிகவை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார்.