Home ஆட்டோமொபைல் ஒரே இன்ஜின் எண்ணில் 15,849 வாகனங்கள்! மெகா மோசடியை அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!

ஒரே இன்ஜின் எண்ணில் 15,849 வாகனங்கள்! மெகா மோசடியை அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!

cag-report-assam-assembly-vehicle-registration-scam
ஒரே இன்ஜின் எண்ணில் 15,849 வாகனங்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மோட்டார் வாகனப் பதிவில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதை மத்திய தணிக்கைக் குழுவின் (CAG) புதிய அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 19, 2026) தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, போக்குவரத்துத் துறையில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரே அடையாளத்தில் பல மாநிலப் பதிவுகள்

மத்திய அரசின் ‘வாகன்’ (VAHAN) தரவுத்தளத்தைச் சோதித்ததில், சுமார் 15,849 வாகனங்கள் ஒரே சேஸிஸ் (Chassis) மற்றும் இன்ஜின் எண்களைக் கொண்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  • இந்த 15,849 வாகனங்களில், 12,112 வாகனங்கள் (76%) அசாமில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மிக முக்கியமாக, இந்த வாகனங்கள் முந்தைய மாநிலத்திலிருந்து பெற வேண்டிய கட்டாயமான ‘தடையில்லாச் சான்றிதழ்’ (NOC) இல்லாமலேயே அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பள்ளி பேருந்துகளில் பாதுகாப்பு விதிமீறல்

பள்ளிப் பேருந்துகளுக்கான பாதுகாப்பிலும் இந்த அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.

  • அசாமில் உள்ள எட்டு மாவட்டங்களில் பள்ளிப் பேருந்துகளுக்கு ‘கல்வி நிறுவன பேருந்து’ (EIB) அனுமதிக்கு பதிலாக, ‘ஒப்பந்த ஊர்தி’ (Contract Carriage) உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம், பள்ளிப் பேருந்துகளுக்குத் தேவையான கட்டாயத் தகுதிச் சான்றிதழ் (Fitness Test) சோதனைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இது மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறை

அசாமில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிகவேகமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதற்கு இணையாகப் போக்குவரத்துத் துறையில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. போக்குவரத்துத் துறையில் 30% முதல் 57% வரை பணியிடங்கள் காலியாக இருப்பதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மதுபான உற்பத்தியிலும் முறைகேடு?

அகலால் மற்றும் பீர் உற்பத்தியிலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது.

  • 2018 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், எதிர்பார்த்த அளவை விட பீர் உற்பத்தி குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.
  • சுமார் 2,039 லட்சம் பல்க் லிட்டர் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 1,809 லட்சம் பல்க் லிட்டர் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டுள்ளது. இது வரி ஏய்ப்புக்கான வாய்ப்பாக அமையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.