Home வணிகம் “₹500 நோட்டுக்கு ஆபத்தா? ATM-ல கிடைக்காதா?”

“₹500 நோட்டுக்கு ஆபத்தா? ATM-ல கிடைக்காதா?”

இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான செய்திகள் வெளியாகின்றன. அவற்றில் எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிவதே இன்று ஒரு பெரிய சவாலாக உள்ளது.

இப்போது ஒரு புதிய வதந்தி பரவி வருகிறது. அதாவது, ரிசர்வ் வங்கி (RBI) மார்ச் 2026க்கு பிறகு ஏடிஎம் இயந்திரங்களில் ₹500 நோட்டுகளை வைப்பதை நிறுத்தப் போகிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைக் கேட்டு, ₹2000 நோட்டுகள் போனது போல ₹500 நோட்டுகளும் போய்விடுமா என மக்கள் பதற்றமடைந்துள்ளனர். ஆனால் மக்களே, கவலைப்பட வேண்டாம். இது முற்றிலும் பொய்யான செய்தி.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான பிஐபி (Press Information Bureau – PIB), இந்த தகவலை ஆய்வு செய்து, இது ஒரு போலி செய்தி (Fake News) என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிஐபி ஃபேக்ட் செக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது. மார்ச் 2026ல் ₹500 நோட்டுகளை நிறுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

₹500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். அவை செல்லாத நோட்டுகள் அல்ல என்றும் பிஐபி உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. வழக்கம்போல் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம், கடைகளில் பயன்படுத்தலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை நடந்ததனால் மக்களின் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி சில விஷமிகள் இவ்வாறு தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற வதந்திகள் பரவியுள்ளன. அரசாங்கம் கூறுவது என்னவென்றால், தயவுசெய்து இத்தகைய வதந்திகளை நம்பாதீர்கள். அவற்றை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எந்த தகவலையும் நம்ப வேண்டாம் என்பதே.

அதனால், உங்கள் பர்ஸில் உள்ள ₹500 நோட்டு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. நிம்மதியாக இருங்கள்.