76 மணி நேரத்தில் சுமார் 3100 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளது 150 கிராம் எடையுடைய ஒரு பறவை. இந்த சாதனை விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பறவை குறித்து பலருக்கும் தெரியாத வியக்கும் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.
இந்தியன் அமூர் பால்கன் (Amur falcon) இனத்தைச் சேர்ந்த இந்த பறவை, ஒரு நாளுக்கு சராசரியாக 1000 கிலோமீட்டருக்கும் மேல் இடைவிடாமல் பறந்து, விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
‘அப்பா பேங்க்’ எனப் பெயரிடப்பட்ட ஒரு வயது நிரம்பிய அமூர் பால்கன் இந்த அசாதாரணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இதன் எடை வெறும் 150 கிராம் மட்டுமே. டேக் செய்த சில நாட்களிலேயே இந்த பறவை 76 மணி நேரத்தில் சுமார் 3100 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளது.
மத்திய இந்தியாவைத் தாண்டி குஜராத் வழியாகச் சென்று, தற்போது அரேபியக் கடல் மேல் பறந்து கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிழக்குத் திசையில் வீசும் சாதகமான காற்றை பயன்படுத்தி, இது ஒரு நாளுக்கு சராசரியாக 1000 கிலோமீட்டர் பறந்துள்ளது. இது உலகிலேயே வேகமாக இடம்பெயரும் வேட்டையாடும் பறவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்திய வனவிலங்கு நிறுவனம் மேற்கொண்ட கண்காணிப்பு திட்டத்தின் படி, அமூர் பால்கன் பறவைகளுக்கு செயற்கை கோல் ட்ராக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று பால்கன்களும் தற்போது தங்கள் வருடாந்திர இடம்பெயர்வு பாதையின் மிக ஆபத்தான பகுதியில் உள்ளன. இந்தியாவைத் தாண்டி அரேபியக் கடலைக் கடந்து, சுமார் 6000 கிலோமீட்டர் இடைவிடாத கடற்பயணம் மேற்கொண்டு சோமாலியாவை அடைந்ததாக கூறப்படுகிறது.
இவ்வளவு நீண்ட தொடர்ச்சியான கடற்பயணத்தை மேற்கொள்ளும் மிகச் சில இடம்பெயர்வு இனங்களில் அமூர் பால்கனும் ஒன்றாகும். மேலும், இந்த அமூர் பால்கன்கள் கிழக்கு ஆசியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா நோக்கிப் பயணிக்கும் போது மணிப்பூரில் உள்ள அடர்ந்த காடுகளில் ஓய்வெடுத்து பின்னர் தங்கள் பயணத்தைத் தொடரும் எனவும் கூறப்படுகிறது.
விஞ்ஞானிகள் தற்போது இந்த பால்கன்களின் சாகசப் பயணத்தை மிக நுணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.








