நடப்பு சாம்பியன் இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்கும் 17வது ஆசிய கோப்பை ஆடவர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது.
பொதுவாக கிரிக்கெட் என்றாலே ஆசிய நாடுகளின் ஆதிக்கமே உலகில் அதிகம். அதனால் ஆசியாவில் வல்லமை பெற்ற அணி எது என்பதை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
1984ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்தொடரில் இந்தியா இதுவரை எட்டுமுறை பட்டத்தை கைப்பற்றி வலுவான அணியாக திகழ்கிறது. அந்த பெருமையை தக்க வைத்து கொள்ள மீண்டும் ஆவல் கொண்டுள்ள இந்திய அணி இம்முறை சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது.
இதற்காக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது. 20 ஓவர் அடிப்படையில் நாளை முதல் 28ஆம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்புச் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும் பி பிரிவில் இலங்கை ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் ஆகிய அணிகளும் வரிசை கட்டி உள்ளன.
லீக் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
அபுதாபியில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் வலுவான ஆப்கானிஸ்தானை எதிர்த்து ஹாங்காங் அணி களமிறங்குகிறது. அதே சமயம் நடப்பு சாம்பியன் இந்தியா வரும் 10ஆம் தேதி தனது முதலாவது லீக்கில் போட்டியை நடத்தும் . யுஏஇ அணியை எதிர்கொள்கிறது.
14ஆம் தேதி நடக்கும் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.








